கோதாவரி ஆற்றுடன் பாலாற்றை இணைக்க வேண்டும்

கோதாவரி ஆற்றுடன் பாலாற்றை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
கோதாவரி ஆற்றுடன் பாலாற்றை இணைக்க வேண்டும்


கோதாவரி ஆற்றுடன் பாலாற்றை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் வரும் 23ஆம் தேதி பாமக சார்பில் பாலாறு பாதுகாப்பு இயக்க பிரசாரப் பயணம் நடைபெறவுள்ளது. இப்பயணத்தில், பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்ளவுள்ளார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வருகை தந்த பாமக தலைவர் ஜி.கே.மணி, செய்தியாளர்களிடம் கூறியது:
பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் சட்டத்தின் மூலம் வழிகாட்டியுள்ளது. அதோடு, சோனியா காந்தி குடும்பமும் ஒப்புதல் வழங்கி விட்டது. அதேபோல், தமிழக அமைச்சரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, சட்ட ரீதியிலும், மனிதாபிமான அடிப்படையிலும் தமிழக ஆளுநர் அந்த 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும். ஆனால், இது காலதாமதமாகிறது. இது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. தமிழக மக்களின் உணர்வை மதித்து விரைந்து விடுதலை செய்ய வேண்டும். 
காஞ்சிபுரம் மாவட்டம் வழியாகச் சென்று கடலில் கலக்கும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை விரைந்து கட்ட வேண்டும். அதன்மூலம், குடிநீர், விவசாயத் தேவைக்கென சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், வேலூர் ஆகிய 4 மாவட்ட ஏரிகளில் நீரை நிரப்ப வேண்டும். அவ்வாறு, தடுப்பணை கட்டுவதையடுத்து, பாலாற்றுக்கு நீரைக் கொண்டு வருவது அவசியமாகிறது. இதற்காக, கோதாவரி ஆற்றினை பாலாற்றுடன் இணைக்க வேண்டும். 
இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன்வந்து ஆவன செய்ய வேண்டும். ஏற்கனவே, ஆந்திரத்தில் கிருஷ்ணா-கோதாவரி ஆறுகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், ஆந்திரம் மிகப்பெரிய வளர்ச்சி பெற்று வருவதோடு, நீர்ப் பற்றாக்குறை இல்லாமல் தன்னிறைவு பெற்றுள்ளது. எனவே, அங்கிருந்து கடலில் சென்று சேரும் உபரிநீர் தமிழகத்துக்கு வந்து சேர, பாலாற்றுடன் கோதாவரியை இணைப்பது மிக அவசியமானது. இதற்கு, தமிழக அரசு விரைந்து நடவடிக்க எடுக்க வேண்டும். சகோதர உணர்வோடு ஆந்திரம் தமிழகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 
நீட் தேர்வு அவசியமற்றது. இதனால், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு எட்டாக்கனியாகும் சூழல் நிலவி வருகிறது. நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். எனவே, கல்வி மாநிலப் பட்டியலில்தான் இருக்க வேண்டும். இதற்கு அனைத்து மாநில முதல்வர்களும் முன்வருவதோடு, மத்திய அரசும் வழிவகை செய்ய வேண்டும் என்றார் அவர். 
இக்கூட்டத்தில், பாமக மாவட்ட, நகர், ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com