இலக்கு ரூ. 11 கோடி: கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி துணிமணி விற்பனை மற்றும் கண்காட்சியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
தீபாவளி விற்பனையைத் தொடங்கி வைத்த ஆட்சியர் பா.பொன்னையா.
தீபாவளி விற்பனையைத் தொடங்கி வைத்த ஆட்சியர் பா.பொன்னையா.


கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி துணிமணி விற்பனை மற்றும் கண்காட்சியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
கடந்த 83 ஆண்டுகளாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் மதிப்பைப் பெற்றுள்ளது. மாறிவரும் ரசனைக்கு ஏற்ப கைத்தறி ரகங்களை புத்தம் புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்து கடந்த ஆண்டு சுமார் ரூ.320 கோடி அளவில் சில்லறை விற்பனையை மேற்கொண்டது. இதன்மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் தொடர்ந்து வேலைவாய்ப்பை அளித்து வருகிறது. 
பாரம்பரிய நெசவுத்தொழிலில், நவீன உத்திகளுடன் அரிய வேலைப்பாடு கொண்ட பட்டுச் சேலைகள், கள்காரி பருத்தி ஆடைகள், திரைச்சீலைகள், வேட்டிகள் உள்ளிட்ட பல்வேறு ரகங்களை உற்பத்தி செய்து வாடிக்கையாளரின் ஆதரவை அந்த நிறுவனம் பெற்று வருகிறது. கோ-ஆப்டெக்ஸ் வேலூர் மண்டலத்தின் கீழ் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சித்தூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 17 விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. 
வரும் தீபாவளிப் பண்டிகையையொட்டி காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் கடையில் துணிமணிகளின் விற்பனையை ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.8.80 கோடி விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டில், ரூ.11 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
தீபாவளியையொட்டி, நிகழாண்டில் தூய பட்டு, அசல் ஜரிகைகளால் தயாரிக்கப்பட்ட திருமண பட்டுச் சேலைகள் ரூ.5 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான பல வண்ணங்களில் சங்க விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதைத்தொடர்ந்து, ஏற்றுமதி ரகங்கள், கனவு நனவுத் திட்டம், ஆன்லைன் விற்பனை, கடன் விற்பனை ஆகிய சிறப்புத் திட்ட சலுகைகளும் வழங்கப்படுகின்றன. மேலும், தமிழக அரசு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கென அனைத்து விடுமுறை நாள்களிலும் விற்பனை நிலையம் செயல்படவுள்ளது. நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கைத்தறி ஆடைகளை வாங்குமாறு பொதுமக்களை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கோரியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், மண்டல மேலாளர் சண்முகம், காஞ்சிபுரம் மேலாளர் (வடக்கு) காய்கேயவேலு, விற்பனை ரக மேலாளர் தணிகைவேலு, விற்பனை மேலாளர் தம்பிராஜன் உள்ளிட்ட கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள், அரசுத்துறை அலுவலர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com