பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டது: போக்குவரத்துத் துறை ஊழியர்கள் புகார்

பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டது: போக்குவரத்துத் துறை ஊழியர்கள் புகார்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை கோட்டத்தில் பணிபுரியும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதாக புகார்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை கோட்டத்தில் பணிபுரியும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு விவகாரம் காரணமாக கோவையில் தொழில் நிறுவனங்கள், கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் சம்பளத்தை ரொக்கமாக பெறுவதில் சிக்கல் நிலவி வரும் நிலையில் கோவை கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் டிசம்பர் 1-ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ரூ. 3 ஆயிரம் ரொக்கமாகவும், மீதித் தொகை அவரவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை கோட்ட நிர்வாகத்தின்கீழ் உள்ள 44 கிளைகளில் பணியாற்றும் 20,745 தொழிலாளர்களுக்கும் தலா ரூ. 3 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்பட்டது.
தலா ஒரு 2,000 ரூபாய் நோட்டு, 100 ரூபாய் நோட்டுகள் 10 வீதம் பெரும்பாலானவர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கிடையே மீதி சம்பளத்தில் பாதி அளவு மட்டுமே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, சிஐடியூ அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க துணைத் தலைவர் அப்துல் ரஷீது, பொருளாளர் நாகராஜ் ஆகியோர் கூறியதாவது:
கோவை கோட்டத்துக்கு உள்பட்ட கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 44 கிளைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்குமே பாதி அளவு ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிர்வாகத்திடம் கேட்டபோது, கையிருப்பில் பணம் இல்லை என்றும், மீதித் தொகையை அடுத்த ஓரிரு நாள்களில் வங்கியில் செலுத்துவதாகவும் கூறுகின்றனர்.
மாதம் முழுவதும் உழைத்த தொகையைத் தவணை முறையில் தருவதை ஏற்க முடியாது. தினமும் கோடிக்கணக்கான ரூபாயை பயணிகளிடம் இருந்து வசூலித்துக் கொடுக்கும் தொழிலாளர்களுக்கே பணத்தை ரொக்கமாக வழங்க மறுப்பது நியாயமில்லை. வீட்டு வாடகை, கடன் தவணை, குழந்தைகளுக்கான கல்வித் தொகை போன்றவற்றை ரொக்கமாக செலுத்த வேண்டியிருப்பதால் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நிலை கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது என்றனர்.
அதேசமயம், கோவையைத் தவிர மற்ற அனைத்துக் கோட்டங்களிலும் தொழிலாளர்களுக்கு முழு ஊதியமும் வழங்கப்பட்டுள்ளது. அதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்டபோது, "கோவை கோட்டத்தில் போதுமான அளவுக்கு பணப் புழக்கம் இல்லை. அதனால்தான் பாதி அளவு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. மீதித் தொகையை ஓரிரு நாள்களில் வங்கிக் கணக்கில் செலுத்தி விடுவோம்' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com