தினசரி காலையில் குடிநீர் விநியோகம்: ஆய்வு நடத்த அமைச்சர் உத்தரவு

கோவை மாநகரம், மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், குடிநீர்ப்

கோவை மாநகரம், மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக அதிகாரிகள் தினசரி ஆய்வுப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, கிராமங்களில் உள்ள அனைத்து தலைமை நீர்த்தேக்க மையங்கள், நீருந்து மையங்கள், நீரேற்று நிலையங்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்.
குடிநீர் விநியோகக் குழாய்களில் அடைப்பு, பழுது இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் திறன் குறைந்த மின் மோட்டார்களை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் அவற்றை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
ஜெனரேட்டர் இயங்கும் நிலையில் இல்லாவிட்டால், புதிதாக வாங்குவதற்கும், தாற்காலிகமாக வாடகைக்கு வாங்கி செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீரைப் பூங்கா பயன்பாட்டுக்கோ வேறு பயன்பாட்டுக்கோ பயன்படுத்தக் கூடாது. வீடுகளில் மின் மோட்டார்களை வைத்து தண்ணீரை உறிஞ்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையர்கள், பொறியாளர்கள், பேரூராட்சி உதவி இயக்குநர்கள், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் தங்களது பகுதிகளில் உள்ள வார்டுகளுக்கு ஒரு பொறுப்பான அலுவலரை நியமனம் செய்ய வேண்டும். குடிநீர் வழங்கும் பணிகளை காலை 6 மணி முதல் நேரில் ஆய்வு செய்வதுடன், மாலையில் அனைத்து அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும்.
கணினி மூலமும், தொலைபேசி மூலமும் மக்களிடம் இருந்து பெறப்படும் புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், ஒவ்வொரு வார்டிலும் புகார் பெட்டிகளையும் வைக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com