அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணியினர் 871 பேர் கைது

கோவையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 871 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். 

கோவையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 871 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். 
கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் காந்திபுரம் அருகே புதன்கிழமை காவிக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்திருந்தனர்.  இந்நிலையில்,  திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே நூற்றுக்கணக்கான இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் தசரதன் தலைமை வகித்தார்.இதில்,  அயோத்தியில் ராமருக்கு ஆலயம் அமைக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
 இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 871 பேரை காட்டூர் போலீஸார் கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்,  அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலர் சதீஷ்,  மாநில பேச்சாளர் மூகாம்பிகை மணி,  மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் குணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாரத் சேனா அமைப்பினர் 119 பேர் கைது: இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் ரயில் மறியலுக்கு பாரத் சேனா அமைப்பினர் முயன்றனர். இந்தப் போராட்டத்துக்கு,  பாரத் சேனா மாநில அமைப்புச் செயலாளர் மணி தலைமை வகித்தார். ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்ற அந்த அமைப்பைச் சேர்ந்த 119 பேரை ரேஸ்கோர்ஸ் போலீஸார் தடுத்தி நிறுத்திக் கைது செய்தனர்.
 விவேகானந்தர் மக்கள் இயக்கம் சார்பில் விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற 11 பேரை பீளமேடு போலீஸார் கொடிசியா அருகே தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.  
வழிபாடு:
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, கோவை ராமர் கோயிலில் தமிழ்நாடு ராமர் சேனா சார்பில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் 50 பேர் பங்கேற்றனர். கோவை கோனியம்மன் கோயிலில் சிவசேனா சார்பில் 45 பேர் அங்கப் பிரதட்சிணத்தில் ஈடுபட்டனர். இந்து மக்கள் கட்சி (தமிழகம்) நிறுவனர் அர்ஜுன் சம்பத் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதேபோல் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com