கோவையில் ஏடிஎம் உடைக்கப்பட்ட விவகாரம்: கேரளம், ஆந்திரத்தில் தனிப் படையினர் விசாரணை

கோவையில் இரு ஏடிஎம்-ஐ உடைத்து ரூ. 30 லட்சம் திருடப்பட்ட வழக்கில் தொடர்புடைய மர்ம நபர்களைப் பிடிக்க கேரளம், ஆந்திர மாநிலத்தில் தனிப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவையில் இரு ஏடிஎம்-ஐ உடைத்து ரூ. 30 லட்சம் திருடப்பட்ட வழக்கில் தொடர்புடைய மர்ம நபர்களைப் பிடிக்க கேரளம், ஆந்திர மாநிலத்தில் தனிப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
கோவை, ஹோப் காலேஜில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் சாலையில் தண்ணீர் பந்தல் அருகே டிசம்பர் 10-ஆம் தேதி அடுத்தடுத்து இரு ஏடிஎம்-ஐ உடைத்து ரூ. 30 லட்சத்தை  மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 
இந்த வழக்குத் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தனிப் படையினர் நடத்திய விசாரணையில், திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், முகமூடி அணிந்து இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டதும்,  அதில் இருவரின் கண்கள், புருவம் ஆகியவை அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருப்பதும் தெரியவந்தது.
 அந்த அடையாளங்களை வைத்து அவர்களது உருவங்கள் வரையப்பட்டு, மாநில குற்ற ஆவணக் காப்பகம் மூலமாக தில்லியில் உள்ள தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து, நாடு முழுவதிலும் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் அவற்றை அனுப்பி, தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 
இதனிடையே, இதேபோல, ஏடிஎம்-ஐ உடைத்த சம்பவங்கள் கேரளம், ஆந்திரத்திலும் நடைபெற்றுள்ளன. எனவே, அதில் ஈடுபட்ட நபர்களே கோவையிலும் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து விசாரிக்கத் தனிப் படையினர் அங்கு சென்றுள்ளனர். 
  அதேசமயம், கோவை மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 661 ஏடிஎம் மையங்களில் 219 மையங்களில் மட்டுமே இரவு நேரங்களில் காவலாளிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், 486 ஏடிஎம் மையங்களில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, மீதம் உள்ள 442 ஏடிஎம் மையங்களில் இரவு நேரங்களில் காவலாளிகளை நியமிக்கவும், 175 மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் வங்கி அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக மாநகரக் காவல் துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com