தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக் கூலியாக ரூ. 313 வழங்க வேண்டும்: ஆட்சியரிடம் மனு

வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக் கூலியாக குறைந்தபட்சம் ரூ. 313 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக் கூலியாக குறைந்தபட்சம் ரூ. 313 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் த.ந.ஹரிஹரனிடம் திங்கள்கிழமை அளித்துள்ள மனு விவரம்:
 கேரள மாநிலத்தில் பணியாற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் தினக் கூலியாக ரூ. 310 வழங்கப்பட்டு வந்தது. தற்போது தினக் கூலியாக ரூ. 313 வழங்கப்பட்டு வருகிறது. கேரளத்தில் உள்ள தேயிலைத் தோட்ட நிறுவனங்களுக்கு வால்பாறையிலும் தேயிலைத் தோட்டம் உள்ளது.
 இந்தத் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தினக் கூலியாக ரூ. 234 மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மாறுப்பட்ட ஊதியம் வழங்குவது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
 இதுவரை, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில் ஒருசில முதலாளிகளுக்கு ஆதரவான தொழிற்சங்கங்களை வைத்து அதை 4 ஆண்டுகளாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 மேலும் உறுப்பினர்களே இல்லாத தொழிற்சங்கத்தைக் கொண்டு ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவதை ஏற்க முடியாது.
 எனவே, தொழிலாளர்கள் பிரதிநிதிகளை கொண்டு சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, கேரளத்தில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதுபோல ஊதியம் நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பணிகளில் முன்னாள் ராணுவத்தினருக்கு சலுகை: முன்னாள் ராணுவத்தினர் அரசுப் பணிகளில் சேருவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பை 5 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர் பணியில் முன்னாள் ராணுவத்தினரைப் பணியமர்த்த வேண்டும். முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு உயர்கல்வி இட ஒதுக்கீட்டை இருமடங்காக உயர்த்தி வழங்கவேண்டும்.
 உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரரின் குடும்ப ஓய்வூதியர்களுக்கான குடியிருப்புகள் தவணை முறையில் வருமானத்துக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் கட்டித் தரப்பட வேண்டும். மாநகராட்சி சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என இந்திய முன்னாள் படைவீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்:  கோவை மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித் துறை, பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் அமைந்துள்ள வண்டல், கிராவல் மற்றும் சவுடு மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே மண் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
 எனவே, அனைத்துப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தண்ணீர் திருட்டு:   கோவை மாநகராட்சி, 32-ஆவது வார்டு, விளாங்குறிச்சி பகுதியில் தனி நபர் பெயரில் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு லாரிகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந் நிறுவனம் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள லாரிகளை பயன்படுத்தி, உரிமம் இன்றி வர்த்தக ரீதியாக தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
 இதனால் அருகில் உள்ள விவசாயக் கிணறுகள், பொதுக் கிணறுகள் வறண்டு வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com