புள்ளியியல் துறை மண்டலப் பயிற்சி முகாம் தொடக்கம்

கோவையில் புள்ளியியல், திட்ட அமலாக்கத் துறையின் மண்டல அளவிலான பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

கோவையில் புள்ளியியல், திட்ட அமலாக்கத் துறையின் மண்டல அளவிலான பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
இம்முகாமுக்கு புள்ளியியல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் ஷாலினி ஏ.போயர் தலைமை வகித்தார். துணைத் தலைமை இயக்குநர் சந்தியா கிருஷ்ணமூர்த்தி, இணை இயக்குநர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ்.ராமலிங்கம் பயிற்சியைத் தொடக்கிவைத்தார்.
இதில், ஷாலினி போயர் பேசியதாவது:
இந்திய அரசின் புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் மூலமாக, தேசிய மாதிரி ஆய்வு என்ற பெயரில் நுகர்வோர் வீட்டுச் செலவினம், வேலை, வேலையின்மை, கடன், சமுதாய நுகர்வு, தொழில்களின் நிலை போன்ற பல்வேறு தலைப்புகளில் ஆய்வு நடத்தப்படும்.
இந்தப் புள்ளி விவரங்கள், வறுமைக்கோடு பற்றிய மதிப்பீடு, சில்லறை விலைக் குறியீட்டு வடிவமைப்பு, வாழ்க்கைத் தரம், ஏற்றத்தாழ்வுகள், விவசாயிகளின் நிலை, தொழில் நிறுவனங்களின் செயல்பாடு, அவை நாட்டுக்கு அளிக்கும் பங்கு ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவுகின்றன.
இந்நிலையில், தேசிய மாதிரி ஆய்வின் 75-ஆவது சுற்று ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரை நடைபெறுகிறது. இதில், கல்வி, உடல்நலம், நுகர்வோர் வீட்டுச் செலவினங்கள் குறித்த ஆய்வு நடைபெறுகிறது.
இந்த ஆய்வின் மூலமாக மக்களின் உடல் நலன், மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள், கல்விக்கான செலவு, இடை நிற்றல், அரசின் சலுகைகள் மக்களைச் சென்றடைந்துள்ளனவா என்பன உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து, தேவையான திட்டங்களை அரசு வகுக்க உதவியாக இருக்கும்.
தேசிய அளவில் 8,108 கிராமங்களிலும், 6,192 நகரங்களிலும் 1.32 லட்சம் குடும்பங்களை அணுகி இந்தத் தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இருந்து தலா 100 கிராமங்கள், நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு நடைபெற உள்ளது.   இதில் கலந்து கொள்ள உள்ள கள அலுவலர்களுக்காக இந்த 3 நாள் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது என்றார்.
 இந்தப் பயிற்சி முகாமில், மேற்கு மண்டலப் புள்ளியியல் துறை இயக்குநர் சதீஷ் உள்ளிட்ட துறை அதிகாரிகள், கள அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com