மக்கள் போராட்டம் மூலமாக பாஜகவுக்கு பதிலடி கொடுக்கப்படும்

வன்முறையைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடும் பாஜகவுக்கு மக்கள் போராட்டங்கள் மூலமாக பதிலடி கொடுக்கப்படும் என மார்க்சிஸ்ட்

வன்முறையைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடும் பாஜகவுக்கு மக்கள் போராட்டங்கள் மூலமாக பதிலடி கொடுக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தின் மீது ஜூன் 17-ஆம் தேதி மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக காவல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து  கோவை மாநகரக் காவல் ஆணையர் அ.அமல்ராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி ஆகியோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலக் குழு உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்டச் செயலாளர் வி.ராமமூர்த்தி ஆகியோர் சந்தித்து, குண்டு வீச்சுக்கு காரணமானவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சி அலுவலகங்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதைத்தொடர்ந்து, கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில், மாநிலங்களவை உறுப்பினர்டி.கே.ரங்கராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கோவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி, ஆத்திரத்தை தூண்டும் முயற்சியில் இந்துத்துவா அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. இந்த குண்டு வீச்சு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதேபோல, மக்கள் நலனுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெறும்போது அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும். குண்டு வீச்சு சம்பவத்துக்குப் பின்னணியில் இந்துத் தீவிரவாதிகள் உள்ளனர்.  பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா குறிப்பிடும்போது அவர்களுக்கு நேர் எதிரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே என கருத்து தெரிவித்துள்ளார். மேலும், கேரளம் மற்றும் திரிபுராவில் ஆட்சியைக் கைப்பற்றுவது தங்களது அடுத்து இலக்கு என குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக திரிபுராவில் மலைவாழ் மக்களுக்கும், இதரப் பிரிவினருக்கும் இடையே வன்முறையை தூண்டி வருகின்றனர். மக்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டிவிட்டு பாஜக அரசியல் ஆதாயம் ஆதாயம் தேட முயற்சிக்கிறது. இதுபோன்ற மக்கள் நலனுக்கு எதிரான பாஜகவின் முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முறியடிக்கும்.
கடந்த 3 ஆண்டு கால பாஜக ஆட்சியால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவு மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவதே பாஜகவுக்கு கொடுக்கும் பதிலடியாக இருக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com