கோவை, மேட்டுப்பாளையத்தில் ரமலான் கொண்டாட்டம்

இஸ்லாமியர்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான ரமலான் கோவையில் திங்கள்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இஸ்லாமியர்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான ரமலான் கோவையில் திங்கள்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
 இஸ்லாமியர்களால் ஈகைத் திருநாளாகக் கொண்டாடப்படும் ரமலான் பண்டிகை, இஸ்லாமியர்களின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களால் ஞாயிற்றுக்கிழமையே கொண்டாடப்பட்டது. பெரும்பாலான இஸ்லாமியர்கள் திங்கள்கிழமை ரமலான் திருநாளைக் கொண்டாடினர்.
 இதையொட்டி, சுமார் ஒரு மாதம் நோன்பை முடித்துக்கொண்ட இஸ்லாமியர்கள், ரமலான் திருநாளில் புத்தாடைகள் அணிந்து, தொழுகைகள் நடத்தி, வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் சார்பில் உக்கடம், அல் அமீன் காலனி, கரும்புக்கடை, சாரமேடு, குறிச்சி பிரிவு, போத்தனூர், குனியமுத்தூர், மதுக்கரை உள்ளிட்ட இடங்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. அமைப்பின் மாவட்டத் தலைவர் சஹாபுதீன், உக்கடம் பொன்விழா நகரில் நடைபெற்ற தொழுகையில் கலந்து கொண்டார். அதேபோல், மாவட்ட துணைச் செயலர்கள் சல்மான், அமான் ஆகியோர் குனியமுத்தூர், மதுக்கரை பகுதிகளில் நடைபெற்ற சிறப்புத் தொழுகை நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றினர்.
 மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளில் பல்வேறு அமைப்புகளின் சார்பிலும், தனித்தனியாகவும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில், ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
 முன்னதாக, தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் கிளைகள் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான அரிசி, எண்ணெய், நெய், காய்கறி போன்ற உணவுப் பொருள்கள் சுமார் 3 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.
 மாநகரம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்புத் தொழுகைகள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்வுகளுடன் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
 மேட்டுப்பாளையத்தில்...:ரமலான் பெருவிழாவையொட்டி, மேட்டுப்பாளையம், உதகை சாலையிலுள்ள ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் நகரப் பகுதிகளை சேர்ந்த 20- க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை சேர்ந்த 15000 இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
 இதையொட்டி, திங்கள்கிழமை காலை 9 மணி அளவில் நகரிலுள்ள அனைத்து பள்ளி வாசல்களைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு உதகை சாலையிலுள்ள ஈத்கா மைதானம் வந்தடைந்ததனர். சின்னப் பள்ளி வாசல் அஜ்ரத் மெüலவி மொகையதீன் தலைமையில் பெரிய பள்ளிவாசல் அஜ்ரத் கலிபுல்லா சிறப்புத் தொழுகையை நடத்தி வைத்தார். இதில், அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் முகமது அலி, முகமது அப்பாஸ், காஜா மொகையதீன், பள்ளி வாசல் நிர்வாகிகள் ஹாஜி முகமது செரீப், ஹரிபுல்லா, முகமது இஸ்மாயில், சாகுல் அமீது, காதர் பாட்ஷா, அபிபுர் ரஹ்மான், அப்துல் அஜீஸ் உள்பட திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com