கோவை மாநகராட்சியில் ரூ. 13 கோடி உபரி நிதிநிலை அறிக்கை தாக்கல்: புதிய திட்டங்கள் இல்லை; பழைய திட்டங்களுக்கு முன்னுரிமை

கோவை மாநகராட்சியில் முதல்முறையாக ரூ. 13 கோடி உபரி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் முதல்முறையாக ரூ. 13 கோடி உபரி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்கான நிதிநிலை அறிக்கையை நிதிக் குழுத் தலைவர் தாக்கல் செய்வது வழக்கம். ஆனால், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவடைந்து 5 மாதங்கள் ஆகின்றன. மேலும், புதிய உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
எனவே, மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், தனி அலுவலராகச் செயல்பட்டு வருகிறார். கோவை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையை 21 ஆண்டுகளுக்குப் பிறகு மாநகராட்சி நிதிக் குழுத் தலைவர் தாக்கல் செய்யாமல், தனி அலுவலரான விஜயகார்த்திகேயன் 2017-18-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை புதன்கிழமை தாக்கல் செய்தார்.
முதல்முறையாக உபரி நிதிநிலை அறிக்கை: கோவை மாநகராட்சியின் மொத்த வருவாய், மூலதன வரவுகள் ரூ. 1,072. 42 கோடி எனவும், வருவாய், மூலதனச் செலவுகளாக ரூ. 1,059.38 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், 2017-18-ஆம் நிதியாண்டில் நிகர உபரியாக ரூ. 13.04 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி வரலாற்றில் உபரி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி, மாநகராட்சி வரவு-செலவு திட்டம் தயார் செய்வது தொடர்பாக நடப்பு நிதியாண்டு முதல் ஒரே மாதிரியான கணக்கு நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. அதன்படி, வரி வருவாய், மூலதன வரவுகள் தவிர நிலுவையில் உள்ள சொத்து, குடிநீர், வடிவால் வரி, மாநில, மத்திய அரசுகள் அளிக்கும் மானிய நிதி ஆகியவை மாநகராட்சி வருவாயில் இணைக்கப்பட்டுள்ளது.
இதில், புதிய கணக்கு நடைமுறை திட்டத்தின் நிலுவை வரியில் 70 சதவீதம் வசூலிக்கப்பட்டாலே அதை நூறு சதவீதமாக கணக்கிட்டு வருவாயில் இணைக்கப்படும். எதிர்காலத்தில் கிடைக்கப்பெறும் வருவாயை முன்கூட்டிய வருவாயாக கணக்கிடப்படுவதால், தற்போது உபரி நிதிநிலை அறிக்கையாக ரூ. 13.04 கோடி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா அறிவித்த திட்டங்களுக்கு முன்னுரிமை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், அனைத்து வசதிகளுடன் கூடிய லாரி நிறுத்துமிடம் போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்: கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை, ஆர்.எஸ்.புரம், டி.பி.சாலை, டவுன்ஹால் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தில் வணிக வளாகங்களுடன் கூடிய தானியங்கி அடுக்குமாடி இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் கேட்டு, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைக்கப் பெற்றதும் நடப்பு நிதியாண்டில் இதற்கான பணிகள் தொடங்கப்படும்.
வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்: வெள்ளலூரில் 67 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய நிதியின்கீழ், ரூ. 171.86 கோடி மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில், பொதுமக்களுக்குத் தேவையான தங்குமிடம், உணவகம், கழிவறை என அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின்படி, புறநகர்ப் பேருந்து வழித் தடங்கள், ஆம்னி பேருந்து வழித் தடங்கள், நான்கு, இரண்டு சக்கர வானக நிறுத்தங்கள் போன்ற உத்தேசிக்கப்பட்ட பேருந்து தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, தொழில்நுட்பக் குழு நடத்திய ஆய்வில் எல் அண்ட் டி புறவழிச் சாலையை அகலப்படுத்தி புதிய பயன்பாட்டுச் சாலையை செட்டிபாளையம் சந்திப்பு, எல் அண்ட் டி புறவழிச் சாலை சந்திப்பு வரை அமைக்கும் வகையில் திருத்தப்பட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
8 குளங்கள் புனரமைக்க
ரூ. 15 கோடி நிதி: கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான 8 குளங்களைப் புனரமைக்கும் பணிகளைத் தொடங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள தகுதி வாய்ந்த ஆலோசகர்களை நடப்பு நிதியாண்டில் தேர்வு செய்து, ரூ. 15 கோடி மதிப்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
பொலிவுறு நகரம்: மத்திய அரசின் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ், நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் பங்குத் தொகையாக ரூ. 100 கோடியும், மாநில அரசின் பங்குத் தொகையாக ரூ. 100 கோடியும் பெறப்படும். இதன் மூலம் மாநகராட்சியின் 8 குளங்களுக்கு அருகில் உள்ள 14 வார்டுகளில் பகுதி சார்ந்த வளர்ச்சி, பல்வேறு செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
குடிமக்களுக்கான செயலி:  பொலிவுறு நகரத்துக்கான செயல்பாடுகளை செயலி மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கும், தங்களுக்குத் தேவைப்படும் சேவைகளை செல்லிடப்பேசி மூலம் அறிந்து, அதைப் பெறுவதற்கும் ரூ. 10 லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீட்டுப் பணிகள் துவங்கி நடப்பு நிதியாண்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
மிதிவண்டி நிலையம்: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் மிதிவண்டி போக்குவரத்தை ஊக்குவிக்கம் வகையில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மிதிவண்டி நிலையம் அமைக்கப்படும். அதற்கான வாடகைத் தொகை செலுத்தி பொதுமக்கள் மிதிவண்டியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவை, ஜி.பி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிக்கப்படும். இத்திட்டத்தை ரூ. 38 கோடி மதிப்பில் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்ந்து நடப்பு நிதியாண்டில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கணினி செயலி மூலம் திடக்கழிவு மேலாண்மை: தெருக்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படும் குப்பைகள் நாள்தோறும் அகற்றப்பட்டு வருகிறது. இருப்பினும், சில இடங்களில் குப்பைகள் அகற்றப்பட்டு சில மணி நேரங்களிலேயே குப்பைகள் மீண்டும் நிரம்புகிறது.
அந்த இடங்களைக் கண்டறிந்து சோதனை அடிப்படையில் 5 இடங்களில் சென்சார் உதவியுடன் கூடிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. சென்சார் கருவி உதவியுடன் குப்பை நிரம்பும்போது, மாநகராட்சி அலுவலகத்துக்கு தகவல் கிடைக்கப்பெறும். அப்போது, குப்பைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இதை அனைத்து வார்டுகளுக்கும் விரிவுப்படுத்த ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்யப்பட்டு ரூ. 15 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம்:  மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளில் உள்ள 87 முதல் 100 வார்டு வரையில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த ரூ. 457 கோடி மதிப்பில் திருத்திய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைக்கப் பெற்றதும் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி பெற்று அம்ரூத் திட்டத்தின்கீழ், பாதாளச் சாக்கடை அமைக்கப்படவுள்ளது.
மாநகரப் பகுதிகளில் மாதிரி சாலை, வ.உ.சி. உயிரியல் பூங்கா புதுப்பித்தல், 24 மணி நேர குடிநீர் விநியோகம், சாலை அமர்வு இருக்கைகள், கம்பியில்லா விளக்கு அமைப்பது, பூங்காக்கள் மேம்பாடு, சூரிய மின்சக்தி திட்டம், திடக்கழிவு மேலாண்மை, தூய்மை பாரதம், கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவது ஆகியவை நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
பழைய திட்டங்களுக்குப் புத்துயிர்:: கோவை மாநகராட்சியில் கடந்த சில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் செயல் வடிவம் பெறாமல் கிடப்பில் போட்டப்பட்டுள்ளன. சில திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அனுமதிக்காக வைக்கப்பட்டுள்ளது.
2017-18-ஆம் நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் குறித்து அறிவிப்பு எதுவும் இடம்பெறாத நிலையில், கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com