பொள்ளாச்சி-போத்தனூர் அகல ரயில் பாதைப் பணிகள் நிறைவு: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இன்று ஆய்வு

கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பொள்ளாச்சி-போத்தனூர் இடையிலான அகல ரயில் பாதைப் பணிகள் புதன்கிழமையுடன் நிறைவடைந்தன.

கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பொள்ளாச்சி-போத்தனூர் இடையிலான அகல ரயில் பாதைப் பணிகள் புதன்கிழமையுடன் நிறைவடைந்தன.
இதையடுத்து, இந்த வழித் தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வியாழக்கிழமை (மார்ச் 23) ஆய்வு செய்கிறார். பொள்ளாச்சி-போத்தனூர் இடையே அகல ரயில் பாதைப் பணிகள் 2009-இல் தொடங்கப்பட்டது. இதற்காக ரூ. 330 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இந்த வழித் தடத்தில் செட்டிபாளையம், அரசம்பாளையம் பகுதிகளில் 2 கி.மீ. தூரத்துக்கு பாறைகளைக் குடைந்து தண்டவாளம் அமைக்கும் பணி காரணமாக பணிகளில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தண்டவாளம் அமைக்கும் பணி நிறைவடைந்தது. புதன்கிழமை மற்ற அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், இந்த வழித் தடத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் வியாழக்கிழமை ஆய்வு செய்கிறார்.
அதன்படி,  வியாழக்கிழமை, பொள்ளாச்சி-கிணத்துக்கடவு வரையிலும், வெள்ளிக்கிழமை, கிணத்துக்கடவு-போத்தனூர் வரையிலும் டிராலி மூலம் ஆய்வு நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாலை போத்தனூரில் இருந்து பொள்ளாச்சி வரை டீசல் என்ஜின் சோதனை ஓட்டமும் நடைபெறுகிறது. ஆகவே, பொள்ளாச்சி-போத்தனூர் ரயில்வே பாதையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com