இஸ்லாமிய சட்டங்களே எங்களுக்குப் பாதுகாப்பானவை: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு

முத்தலாக் விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இஸ்லாமிய சட்டங்களே எங்களுக்குப் பாதுகாப்பானவை என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

முத்தலாக் விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இஸ்லாமிய சட்டங்களே எங்களுக்குப் பாதுகாப்பானவை என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த அமைப்பின் கோவை மாநகர பெண்கள் அணி பொறுப்பாளர்கள் கதீஜா, பர்ஜானா, இஸ்லாமிய மாணவிகள் அமைப்பின் மாநிலத் தலைவர் முபீனா, பேராசிரியர் ஜெசீமா உள்ளிட்டோர் கோவையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அளித்த பேட்டி:
இந்தியாவில் பல்வேறு ஜாதி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் வாழும் நிலையில், இந்திய அரசியலமைப்பு அனைவருக்கும் இனம், மதம் சார்ந்த சில சிறப்புச் சட்டங்களைப் பின்பற்ற அனுமதி அளித்துள்ளது.
திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை ஆகியவற்றை இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் பின்பற்றுவதற்கு இஸ்லாமியர்களுக்கு உரிமை உள்ளது.
இந்நிலையில், மத்திய பாஜக அரசு இஸ்லாமியர்களின் விவாகரத்து விவகாரத்தை பூதாகரப் பிரச்னையாக உருவாக்கியுள்ளது. ஆனால், குடும்பத்தை மிகச் சிறந்த அளவில் கட்டமைக்கக் கூடிய சட்டங்கள் இஸ்லாத்தில் உள்ளன.
இஸ்லாமிய திருமணங்களில் வரதட்சிணை வாங்கப்படுவதில்லை. அதேபோல், முத்தலாக் என்பது மிகவும் இக்கட்டான சூழலில் மிக அரிதாக நடைபெறக் கூடிய ஒன்றாகும்.
விவாகரத்து விஷயத்தில் இது ஒரு அம்சமே தவிர, இது மட்டுமே சட்டம் அல்ல. பாஜக கூறுவதைப் போன்று முத்தலாக் எங்களுக்கு எதிரானது அல்ல. பெண்களும் விவாகரத்து செய்யக் கூடிய அனுமதியை இஸ்லாம் குலா எனும் வழிமுறை மூலம் வழங்கியிருப்பதை பிரதமர் மோடி பேசுவதேயில்லை.
முத்தலாக் விஷயத்தில் அக்கறையாக இருக்கும் பிரதமர், இஸ்லாமிய பெண்களின் கல்வி, வேலைவாய்ப்புகளில் கவலைப்படாதது ஏன் என்று தெரியவில்லை. எங்களுக்கு இஸ்லாமிய சட்டங்களே பாதுகாப்பானவை என்பதால் பொது சிவில் சட்டம் தேவையில்லாத ஒன்று. பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வுக்காக கோவையில் 20-ஆம் தேதி (சனிக்கிழமை) பொதுக் கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com