கோவை நகைப் பட்டறையில் ஊழியரை தாக்கி 730 கிராம் தங்கம் கொள்ளை

கோவையில் உள்ள நகைப் பட்டறையில் ஊழியரைத் தாக்கி 730 கிராம் தங்கத்தை மர்ம நபர்கள் சனிக்கிழமை கொள்ளை அடித்துச் சென்றனர்.இதுகுறித்து போலீஸார் கூறியதாவது

கோவையில் உள்ள நகைப் பட்டறையில் ஊழியரைத் தாக்கி 730 கிராம் தங்கத்தை மர்ம நபர்கள் சனிக்கிழமை கொள்ளை அடித்துச் சென்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கோவை பெரியகடை வீதியை அடுத்த கெம்பட்டிக் காலனியை சேர்ந்தவர் குணசேகரன். இவர், தர்மராஜா கோயில் பகுதியில் சொந்தமாக நகைப் பட்டறை வைத்துள்ளார்.
மேலும், பல்வேறு கடைகளில் இருந்து மொத்தமாகத் தங்கத்தை வாங்கி நகைகளாகச் செய்து கொடுத்து வருகிறார். இவரது நகைப் பட்டறையில் அதே பகுதியைச் சேர்ந்த சரவணகுமார், நாகராஜ் ஆகியோர் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், குணசேகரனின் நகைப் பட்டறையில் வெள்ளிக்கிழமை இரவு ஊழியர்கள் இருவரும் வேலை செய்து கொண்டிருந்தனர். அதிகாலை 2.30 மணி அளவில் சரவணகுமார் தேநீர் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டார். அப்போது, பட்டறைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் நாகராஜை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், அவரது முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவி அங்கிருந்த 730 கிராம் தங்கத்தைக் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டனர். பின்னர், சரவணகுமார் வந்து பார்த்தபோது, நாகராஜ் மயங்கிக் கிடந்துள்ளார்.
இதுகுறித்து பெரியகடை வீதி போலீஸாருக்கும், உரிமையாளர் குணசேகரனுக்கும் சரவணகுமார் தகவல் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலின்படி, அங்கு வந்த போலீஸார் பட்டறை ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்துக்கு துப்பறியும் மோப்ப நாயும், தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகளைச் சேகரித்தனர். மர்ம நபர்களால் கொள்ளை அடித்துச் செல்லப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ. 20 லட்சம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தனிப் படைகள் அமைப்பு:
இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள கோவை மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் உத்தரவின்படி, துணை ஆணையர் எஸ்.லட்சுமியின் மேற்பார்வையில் இரண்டு தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவை ராஜ வீதியில் உள்ள நகைக் கடையில் 3.250 கிலோ நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com