அரசு போக்குவரத்துக்கழக பொருள்களை ஜப்தி செய்ய உத்தரவு

பேரூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த வங்கி ஊழியரின்  குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் போக்குவரத்துக்கழக கோட்ட

பேரூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த வங்கி ஊழியரின்  குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் போக்குவரத்துக்கழக கோட்ட அலுவலகத்தில் உள்ள கணினி, மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருள்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை, ராமசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வி.எஸ்.வெங்கிடசாமியின் மகன் ஹரி (29). இவர், கோவையில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், 2006 டிசம்பர் 15-ஆம் தேதி  பேரூர் அருகே இருசக்கர வாகனத்தில் ஹரி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து ஹரியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே ஹரி உயிரிழந்தார்.
இதுகுறித்து, பேரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, ஹரியின் தாயார் உரிய இழப்பீடு வழங்கக் கோரி முதலாவது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹரியின் குடும்பத்துக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில்  ரூ. 5.74 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று 2012-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், அதன் பின்னரும் இழப்பீடு வழங்கவில்லை. இதனால், ஹரியின் தாயார் 2016-ஆம் நிறைவேற்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வட்டியுடன் சேர்த்து ரூ.10.51 லட்சம் வழங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசுக் கோட்ட போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் உள்ள கணினி, மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருள்களை நவம்பர் 23-ஆம் தேதிக்குள் ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, நீதிமன்ற ஊழியர்கள் கோட்ட ப்போக்குவரத்துக்கழக அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்றனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் நீதிமன்ற ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இழப்பீட்டுப் பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாகத் தெரிகிறது.இதையடுத்து, ஜப்தி நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com