கௌசிகா நதியை சுத்தப்படுத்தும் பணியில் கல்லூரி மாணவ, மாணவிகள்

நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள கெளசிகா  நதியை சுத்தப்படுத்தும் பணியில் பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள கெளசிகா  நதியை சுத்தப்படுத்தும் பணியில் பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
நொய்யலின் முக்கியக் கிளை நதியாக உள்ள கௌசிகா நதி,  குறைந்த மழைப் பொழிவு,  வழித்தட ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் இன்று சீரழிந்து கிடக்கிறது. குருடிமலையில் இருந்து கோவை - சத்தி நெடுஞ்சாலை வரையிலும் மிகவும் அகலமானதாகக் காணப்படும் கௌசிகா நதி,  அதைத் தொடர்ந்து செல்லும் வழிகளில் சிறிய கால்வாயாக மாறியுள்ளது.  பல இடங்களில் ஆக்கிரமிப்புகளாலும்,  புதர் மண்டிக் கிடப்பதாலும் ஆற்றின் அடையாளமே மாறிப் போயுள்ளது.
இதனால்,  குருடிமலையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மக்களுக்குப் பயன்படாமல் வீணாகி வருகிறது.  சுமார் 46 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கௌசிகா நதி வழித்தடத்தை சீரமைத்தால் 2 ஆயிரம் ஏக்கர் வரையிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். 300-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நீர் ஆதாரம் கிடைக்கும். இந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள்  ஏற்கெனவே தீர்மானங்களை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியுள்ளன.
இந்த நிலையில்,  இதனை சுத்தப்படுத்தும் பணியில் பாரதியார் பல்கலைக்கழக ஆளுமைக்குள்பட்ட எஸ்.என்.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா கல்லூரி,  காருண்யா பல்கலை., நேரு மஹா வித்யாலயா,  கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளைச்  சேர்ந்த  600-க்கும் மேற்பட்ட என்.எஸ்.எஸ் மாணவ மாணவிகள் ஈடுபட்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ, பெ.நா.பாளையம் டி.எஸ்.பி சீனிவாசலு,  ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம் செயலாளர் கரிஷ்டானந்தர் ,  பாரதியார் பல்கலைக்கழக சமூகப் பணியியல் துறைத் தலைவர் லவ்லினா லிட்டில் பிளவர்,  கௌசிகா -அத்திக்கடவு நதி பாதுகாப்புக் குழு செயலாளர் செல்வராஜ்,  காருண்யா பல்கலைக்கழக  முதன்மையர் ஜோசப் கென்னடி, செந்தமிழ் அறக்கட்டளை கனக சண்முகசுந்தரம்,  ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் மில்லேனியம் சுதாகர்,  வாவ் கிளப் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com