தீபாவளி: கோவை மண்டலத்தில் 430 சிறப்புப் பேருந்துகள்: ஆம்னி பேருந்துகள் இன்றுமுதல் கண்காணிப்பு

தீபாவளியையொட்டி கோவை மண்டலப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக 430 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளியையொட்டி கோவை மண்டலப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக 430 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) முதல் கண்காணிக்க சாலைப் போக்குவரத்து இணை ஆணையரகம் முடிவு செய்துள்ளது.
தொழில் நகரமான கோவை, திருப்பூரில் இயங்கும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் தீபாவளிக்காக தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக ரயில்கள், பேருந்துகளை நாடுவது வழக்கம். இதனால்,  தீபாவளி  நேரத்தில் ரயில்கள், பேருந்துகளில் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில்,  கோவை,  திருப்பூரில் உள்ள வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டலம் சார்பில் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 430 சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.
இந்தப் பேருந்துகள் கோவை,  திருப்பூர் மட்டுமின்றி ஈரோடு,  நீலகிரி  மாவட்டங்களில் இருந்தும் இயக்கப்பட உள்ளன. இவை,  சென்னை, சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் கே.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
அக்டோபர் 15 முதல் 17-ஆம் தேதி வரை கோவை, ஈரோடு, திருப்பூர், உதகையில் இருந்து சென்னைக்கு 95 நடைகள் இயக்கப்பட உள்ளன. அதிகபட்சமாக கோவை - சேலம் இடையே 300 நடைகளும், கோவை - மதுரை இடையே 250 நடைகளும், திருப்பூர் - மதுரை இடையே 275 நடைகளும்,  திருப்பூர் - திருச்சி இடையே 230 நடைகளும் இயக்கப்படவுள்ளன.
இந்த நான்கு மாவட்டங்களில் இருந்தும் பிற மாவட்டங்களுக்கு மொத்தம் 1,750  நடைகள் இயக்கப்பட இருப்பதாகவும், கோவை - சென்னை இடையே மட்டும் 60 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
கோவையில், காந்திபுரம், சிங்காநல்லூர் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 பிற போக்குவரத்துக் கழகங்களில் இருந்தும் கோவை, திருப்பூர் பகுதிகளுக்கு கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 பயணிகளின் நெரிசலுக்கு ஏற்ப சிறப்புப் பேருந்துகளின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டு அவர்களைக் காத்திருக்க வைக்காத வகையில் அட்டவணைகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த சிறப்புப் பேருந்துகள் தீபாவளிக்குப் பிறகு ஓரிரு நாள்கள் வரையிலும் இயக்கப்பட உள்ளன.
ஆம்னி பேருந்துகளில் இன்று முதல் சோதனை: தீபாவளியையொட்டி,  ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோவை மண்டல சாலைப் போக்குவரத்து இணை ஆணையர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கோவையில் ஆம்னி பேருந்துகள் உரிமம் பெற்ற வழித் தடத்தில் இயக்கப்படுகின்றனவா, முறையான ஆவணங்களுடன் அரசு நிர்ணயித்த கட்டணத்துடன் மட்டுமே இயக்கப்படுகின்றனவா  என்பது தொடர்பாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) முதல் சோதனை நடத்தப்பட்ட உள்ளது.
இதற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் ஏற்கெனவே 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் கணியூர், கோவைப்புதூர், பொள்ளாச்சி, அவிநாசி சாலை, தாராபுரம், பல்லடம், எல் அண்ட் டி புறவழிச் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வரும் 24-ஆம் தேதி வரை சோதனைகளில் ஈடுபடுவர்.
 கடந்த ஆண்டு கூடுதல் கட்டணம் வசூலித்தது, அனுமதியின்றி இயக்கியது தொடர்பாக சுமார் 350 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில்,  அது தொடர்பாக 56 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
 எனவே, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்,  பயண முகவர்கள்,  நடத்துநர்கள் பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டாம். விதிமுறைகளை மீறும் ஆம்னி பேருந்துகள் குறித்து 1800-425-6151 என்ற  எண்ணில்  புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com