இளம் பெண்ணைக் கொலை செய்து புதைத்த மென்பொருள் பொறியாளர் கைது

கோவையில் இளம்பெண்ணை சுற்றுலா அழைத்துச் சென்று கொலை செய்ததாக மென்பொருள் பொறியாளர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் இளம்பெண்ணை சுற்றுலா அழைத்துச் சென்று கொலை செய்ததாக மென்பொருள் பொறியாளர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கோவை, வேலாண்டிபாளையம் கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஹைதர் ஷெரீப். இவரது மகள் ருக்சனா (21). பட்டதாரியான இவர் கடந்த 16-ஆம் தேதி மாயமானதாகக் கூறி அவரது பெற்றோர் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் கடந்த 19-ஆம் தேதி புகார் அளித்திருந்தனர்.
இதையடுத்து, அவரது செல்லிடப்பேசி எண்ணுக்கு வந்த அழைப்புகளைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், ருக்சனா மாயமான தேதியில் சரவணம்பட்டியைச் சேர்ந்த பிரசாந்த் (26) என்பவருடன் பேசியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வரும் பிரசாந்தை ஞாயிற்றுக்கிழமை பிடித்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதில், ருக்சனாவுக்கும், பிரசாந்துக்கும் பழக்கம் இருந்து வந்ததும், ருக்சனாவை மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு பழப்பண்ணைக்கு பிரசாந்த் கடந்த 16-ஆம் தேதி சுற்றுலா அழைத்துச் சென்றதும் தெரியவந்தது. அங்கு ஏற்பட்ட தகராறில் ருக்சனாவை பிரசாந்த் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை பிரசாந்த் அங்கேயே குழி தோண்டி புதைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
இதையடுத்து பிரசாந்தை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், புதைக்கப்பட்டிருந்த சடலத்தைத் தோண்டி
எடுத்து கோவை அரசு மருத்துவ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ருக்சனாவை கொலை செய்ததாக பிரசாந்தை சாய்பாபா காலனி போலீஸார் கைது செய்தனர்.
சடலத்தை வாங்க மறுத்து போராட்டம்: இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட ருக்சனாவைப் பற்றி ஊடகங்களில் தவறாக செய்தி வெளியானதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், ருக்சனாவின் சடலத்தை வாங்க மறுத்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் காவல் துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, இரவு 7 மணி அளவில் சடலத்தை பெற்று சென்றனர். இந்த சம்பவம் காரணமாக கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com