குளங்களில் உள்ள நச்சு நீரை வெளியேற்றக் கோரிக்கை

கோவையில் உள்ள குளங்களில் தேங்கி நிற்கும் நச்சு நீரை வெளியேற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கோவையில் உள்ள குளங்களில் தேங்கி நிற்கும் நச்சு நீரை வெளியேற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை அமைப்பின் மாநகரச் செயலர் எம்.எஸ்.வேல்முருகன் உள்ளிட்டோர், மாசடைந்த தண்ணீருடன் வந்து ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
சுமார் 190 ஏக்கர் பரப்பளவில் உள்ள முத்தண்ணன் குளத்தின் நீர் மிகவும் மாசடைந்து காணப்படுகிறது. இதனால் சொக்கம்புதூர், ஆர்.எஸ்.புரம், பூசாரிபாளையம், காந்தி பூங்கா பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. இந்த நீரின் மாதிரியை சோதனைக்கு அனுப்பியதில் அதில் ஆல்கலைன், நைட்ரேட் போன்ற வேதியியல் பொருள்களும், பாக்டீரியா போன்ற ஏராளமான கிருமிகளும் அளவுக்கு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த நீர் உபயோகத்துக்கு ஏற்றது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த குளத்தில் உள்ள நீரை வெளியேற்றிவிட்டு, குளத்துக்கு வரும் நீரை சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், மாநகரம், மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள கழிவு நீர் சேகரமாகும் குளங்களிலும் நீரை வெளியேற்றிவிட்டு, தூய்மையான நீர் குளத்துக்குள் வரவும், நிலத்தடி நீர் மோசமடையாமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்: கோவை, சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பின்புறத்தில் உள்ள டாஸ்மாக் கடை (எண் 1655) பிரதான சாலையை ஒட்டியிருப்பதால் இங்கு தினசரி நூற்றுக்கணக்கானவர்கள் மது அருந்த குவிகின்றனர். அவர்களின் வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், மது அருந்துபவர்கள் கேலி செய்வதால் அந்த வழியாக பெண்கள், பள்ளிமாணவிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த மதுக்கடையை அகற்ற ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரத் சேனா தமிழ்நாடு அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன் மனு அளித்துள்ளார்.
நீட் பயிற்சி மையங்களை கட்டுப்படுத்த வேண்டும்: கோவை மாநகரில் கட்டுப்பாடின்றி பெருகியுள்ள நீட் பயிற்சி மையங்களை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக விழிப்புணர்வு இயக்கத் தலைவர் ஜே.டி.சாக்ரடீஸ் மனு அளித்துள்ளார்.
சாய்பாபா காலனி பகுதியில் செயல்படும் ஒரு பயிற்சி மையம் மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்துக் கொண்டு சரியான பயிற்சி அளிக்காமல் ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர் தற்போது பணத்தைத் திருப்பிக் கேட்கும் நிலையில் அவர்களை நிறுவனத்தினர் மிரட்டி வருகின்றனர்.
இதேபோல் கோவை மாநகரில் பல நீட் பயிற்சி மையங்கள் முறையற்ற வகையில் செயல்பட்டு வருகின்றன. இவற்றைக் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சாட்டையடி மக்களுக்கு வீடு வழங்க வேண்டும்: கோவை துடியலூர் சந்தையில் திறந்த வெளியில் ஏராளமான சாட்டையடி மக்கள் வசித்து வருகின்றனர். சொந்த வீடில்லாமல் தெருவில் வசிக்கும் இவர்களின் குழந்தைகள் பள்ளி செல்ல முடியாமலும், கழிவறை வசதியில்லாமலும் அவதிப்படுகின்றனர்.
சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வரும் இவர்களுக்கு வீடு வழங்கவும், மாற்றுத் தொழிலில் ஈடுபட கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நீதிக் கட்சித் தலைவர் ந.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார்.
ஆக்கிரமிப்பு அகற்றக் கோரிக்கை: கோவை -ஆனைகட்டி சாலையில் வெங்கிட்டாபுரம் சிக்னல் முதல் இடையர்பாளையம் வரையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சாலையின் இருபகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் இடையர்பாளையம் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
பீளமேடு வி.கே.ரோடு கருப்பண்ண கவுண்டர் லே அவுட் பகுதியில் 220-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் நிலையில் இப்பகுதியில் உள்ள காஸ்டிங் தொழிற்சாலையால் நச்சுப்புகை பரவி காற்று மாசடைந்து வருவதாகவும், இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் பீளமேடு பகுதி அதிமுக செயலர் சி.துரைசாமி மனு அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com