காரமடை அரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா தொடக்கம்

காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா தொடங்கியது.

காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா தொடங்கியது.
இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து, அரங்கநாதப் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவி சமேதரராய் கோயில் உள்பிரகாரம் வலம் வந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, அதிகாலை முதலே கோயிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அரங்கநாதரை தரிசனம் செய்தனர். பின்னர் திருக்கோயில் வளாகம் முழுவதும் வீற்றிருந்த அரங்கனின் அடியார்களான தாசர்களுக்கு படி அரிசி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதற்கென இல்லங்களில் இருந்து கொண்டுவந்த அரிசி, பருப்பு, காய்கறிகளை கோயில் வளாகத்தில் அமர்ந்திருந்த தாசர்களின் முன்பு வைக்கப்பட்டிருந்த இலைகளில் வைத்து வணங்கி, அவர்களிடம் ஆசி பெற்றனர். பின்னர் தாசர்கள் வழங்கிய பிடி அரிசி, காய்கறிகளைத் தங்களுடன் எடுத்துச் சென்று வீட்டில் சமைத்தனர். பின்னர், அந்த உணவை முன்னோர்களுக்கு வைத்துப் படையலிட்டு வணங்கிய பின் குடும்பத்தாருடன் தாமும் உண்டனர்.
புரட்டாசி சனிக்கிழமை விழாவையொட்டி பக்தர்கள் 5 வாரம் விரதம் இருந்து அரங்கனை வணங்கிச் செல்வது வழக்கம். அதற்கேற்ப ஆவணி 31-ஆம் தேதி இக்கோயிலில் நடைபெற்ற முதல் புரட்டாசி சனிக்கிழமை விழாவில் கோயில் செயல் அலுவலர் விமலா, மேலாளர் மகேந்திரன், ஊர்கவுடர் முத்துசாமி, கோயில் மிராசுகள் ராஜப்பன், ஜெகநாதன், கிருஷ்ணன், தாசபளஞசிக மகாஜன சங்கத் தலைவர் கே.பி.வி.கோவிந்தன் ஆகியோர் உள்பட காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, செப்டம்பர் 19-ஆம் தேதி மஹாளய அமாவாசை, 21-ஆம் தேதி நவராத்திரி உற்சவ தொடக்கம் நடைபெறுகிறது. 23-ஆம் தேதி 2-ஆவது சனிக்கிழமை உற்சவமும், 29-ஆம் தேதி மஹா நவமி மற்றும் சரஸ்வதி பூஜையும், 30-ஆம் தேதி 3-ஆவது சனிக்கிழமை மற்றும் விஜயதசமி விழாவும், அதைத் தொடர்ந்து குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளல் மற்றும் அம்பு போடும் நிகழ்வுடன் நவராத்திரி உற்சவ பூர்த்தியும் நடைபெறுகிறது.
அக்டோபர் 7-ஆம் தேதி புரட்டாசி 4-ஆம் சனிக்கிழமை மற்றும், 14-ஆம் தேதி 5-ஆம் சனிக்கிழமை உற்சவமும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com