கோவையில் பரவலாக மழை: சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு

கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. மேலும், சிறுவாணி அணையின் நீர்மட்டமும் தற்போது 37 அடியாக உயர்ந்துள்ளது.

கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. மேலும், சிறுவாணி அணையின் நீர்மட்டமும் தற்போது 37 அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாள்களாக கோவையில் ஓரளவு மழை பெய்து வருகிறது. இதனால், கோவையில் உள்ள நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. கோவை மாநகரில் சனிக்கிழமை காலை முதலே வானம் சற்று மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகலில் இருந்து ஆர்.எஸ்.புரம், இடையர்பாளையம், கவுண்டம்பாளையம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழையால் லங்கா கார்னர் பாலம், அவிநாசி சாலை மேம்பாலம், வடகோவை மேம்பாலம் ஆகிய இடங்களில் மழை நீர் தேங்கியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
எல்லைப் பகுதிகளில் பலத்த மழை: கோவை மாவட்டத்தை ஒட்டிய தமிழக எல்லைப் பகுதியான வாளையாறு, வேலந்தாவளம், க.க.சாவடி, மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை முதலே தொடர் மழை பெய்தது. இதில், எல் அண்டு டி புறவழிச்சாலை, எட்டிமடை, வாளையாறு உள்ளிட்ட மாநில எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் அவதிக்குள்ளாகினர். அவ்வப்போது மின் தடையும் நீடித்ததால் அப்பகுதியினரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சிறுவாணி நீர்மட்டம் உயர்வு: மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சிறுவாணி அணையின் நீர் பிடிப்புப் பகுதியிலும் ஓரளவு மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் தற்போது 37 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல, பலத்த மழை நீடிக்கும் பட்சத்தில் சில நாள்களில் சிறுவாணி அணை நிரம்பவும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு அணை நிரம்பினால் கோவையின் குடிநீர்த் தட்டுப்பாடும் குறைய வாய்ப்பு உள்ளது.
கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளம்: மழை காரணமாக கோவை குற்றாலம் அருவியிலும் சனிக்கிழமை மாலை திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட நேரத்துக்கும் ஒரு மணி நேரம் முன்னதாகவே அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடைவிதிக்கப்பட்டது. மேலும், இதே அளவு மழை நீடித்தால் கோவை குற்றாலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல ஞாயிற்றுக்கிழமை தடை விதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், அன்றைய தினம் காலையில் அருவியில் எந்த அளவுக்கு வெள்ளம் செல்கிறது என்பதைப் பார்வையிட்ட பின்னரே கோவை குற்றாலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்களா என்பது தெரியும் என்று போளுவாம்பட்டி வனச் சரகர் சிவா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com