தேசிய தரவரிசை மதிப்பீடு: வேளாண் பல்கலை.யை முந்தியது பாரதியார் பல்கலை.

நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் கோவை மண்டலத்தைச் சேர்ந்த

நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் கோவை மண்டலத்தைச் சேர்ந்த பல கல்வி நிறுவனங்கள் அதில் இடம் பிடித்துள்ளன. இந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு பாரதியார் பல்கலைக்கழகம் முந்தியுள்ளது.
   நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காகவும், தரத்தை மேம்படுத்தவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் தரவரிசைப் பட்டியல் வெளியிடும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதற்காக என்.ஐ.ஆர்.எஃப். என்ற தேசிய தரவரிசை மதிப்பீடு அமைப்பு உருவாக்கப்பட்டது.
   இந்த அமைப்பு நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை, பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், மேலாண்மை நிறுவனங்கள், மருந்தியல் கல்லூரிகள் என்ற அடிப்படையில் பிரித்து கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவற்றை தரவரிசைப்படுத்தி  பட்டியலை வெளியிடும்.
   இந்நிலையில்,  2018-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதில், கோவையைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் சிறப்பிடம் பிடித்துள்ளன. 
ஒட்டுமொத்தமாக நாடு முழுவதிலும் உள்ள சிறந்த 100 கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 22 நிறுவனங்கள் இடம் பிடித்துள்ள நிலையில் கோவையைச் சேர்ந்த அமிர்தா விஷ்வ வித்யா பீடம் தேசிய அளவில் 15-ஆவது இடத்தையும், பாரதியார் பல்கலைக்கழகம் 20-ஆவது இடத்தையும், வேளாண்மைப் பல்கலைக்கழகம் 40-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
  பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி 64-ஆவது இடத்தையும், பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல், ஆராய்ச்சி நிறுவனம் 75-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 28-ஆவது இடத்தையும், பாரதியார் பல்கலைக்கழகம் 45-ஆவது இடத்தையும், அமிர்தா விஷ்வ வித்யா பீடம் 16-ஆவது இடத்தையும் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.   நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த 5 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்திருந்த நிலையில் இந்த ஆண்டு 4 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளன. இதில், அமிர்தா விஷ்வ வித்யா பீடம் 8-ஆவது இடத்தையும், பாரதியார் பல்கலைக்கழகம் 13-ஆவது இடத்தையும், வேளாண்மைப் பல்கலைக்கழகம் 25-ஆவது இடத்தையும், காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகம் 89-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
   இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டு அமிர்தா 9-ஆவது இடத்தையும், வேளாண் பல்கலை. 17-ஆவது இடத்தையும், பாரதியார் பல்கலைக்கழகம் 28-ஆவது இடத்தையும் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.   இந்தப் பட்டியலில் பாரதியார் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டை விட முன்னேறியுள்ள நிலையில், வேளாண்மைப் பல்கலைக்கழகம் பின்தங்கியுள்ளது.
 பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி தேசிய அளவில் 29-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சிஐடி கல்லூரி 62-ஆவது இடத்தையும், அரசு தொழில்நுட்பக் கல்லூரி 93-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
கோவை அரசு கலைக் கல்லூரி... கலை, அறிவியல் கல்லூரிகளைப் பொருத்தவரையில் நாடு முழுவதிலும் உள்ள சிறந்த 100 கல்லூரிகளில் 38 கல்லூரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவையாகவும், இதில் 11 கல்லூரிகள் கோவை மண்டலத்தைச் சேர்ந்தவையாகவும் உள்ளன. அதன்படி, கோவை கல்லூரிகள் தேசிய அளவில் பிடித்துள்ள இடங்கள் வருமாறு:
  பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி - 11, பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி - 16, அரசு கலைக் கல்லூரி - 33, ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம் - 39, ஈரோடு வேளாளர் பெண்கள் கல்லூரி - 57, ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி - 64, 
ஈரோடு கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரி - 67, சி.எம்.எஸ். அறிவியல், வணிகவியல் கல்லூரி - 72, ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரி - 89, டாக்டர் என்.ஜி.பி. கலை, அறிவியல் கல்லூரி - 91, ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரி - 98.
  மேலாண்மைக் கல்லூரிகள் பட்டியலில் பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனம் 33-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
15-ஆவது இடம் பிடித்த நீலகிரி ஜே.எஸ்.எஸ்.மருந்தியல் கல்லூரி...: மருந்தியல் கல்லூரிகள் பட்டியலில் நீலகிரி ஜே.எஸ்.எஸ். கல்லூரி 15-ஆவது இடத்தையும், பி.எஸ்.ஜி. மருந்தியல் கல்லூரி 31-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. மருத்துவக் கல்லூரிகள் பட்டியலில் பி.எஸ்.ஜி.   மருத்துவ அறிவியல், ஆராய்ச்சி நிறுவனம் 21-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com