பூங்காக்களைப் பராமரிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்: நா.கார்த்திக் எம்.எல்.ஏ.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சிங்காநல்லூர் சட்டப் பேரவை திமுக உறுப்பினர் நா.கார்த்திக் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து,  கோவை, பீளமேடு, பிபிஎஸ் காலனியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு பராமரிப்பின்றி உள்ள பூங்காவை ஆய்வு செய்த அவர் கூறியதாவது:
திமுக ஆட்சிக் காலத்தில்  கடந்த 2010 -ஆம் ஆண்டு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்றது. அப்போதைய முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரது உத்தரவின் பேரில் ரூ. பல கோடி நிதி ஒதுக்கப்பட்டு அண்ணாவின் நூற்றாண்டு விழா பூங்காக்களும், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பூங்காக்களும் அமைக்கப்பட்டன.
 இந்தப் பூங்காக்களில் பல வகையான மூலிகைத் தன்மையுள்ள செடிகள், மரங்கள், பூச்செடிகள் நடப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்தன. மேலும், ஆண்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் நடைப் பயிற்சி மேற்கொள்வதற்காக பூங்காக்களில்  நடைபாதையும்,  குழந்தைகள் , மாணவ, மாணவிகள் விளையாட வசதியாக விளையாட்டுத் திடலும், விளையாட்டுச் சாதனங்களும் அமைக்கப்பட்டு இருந்தன.
 மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்ட இந்தப் பூங்காக்கள் தற்போது போதிய பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து காணப்படுகின்றன. பூங்கா பராமரிப்பு நிறுவனங்களுக்கான ஒப்பந்தத்தை அரசு  நிர்வாகம் புதுப்பிக்காததே இதற்கு காரணம்.
 பூங்காவை சுத்தம் செய்யும் ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை. 
மேலும், மரங்கள், செடிகள் ஆகியவை நீரின்றியும், பராமரிப்பு இன்றியும், புதர் மண்டிக் காணப்படுகின்றன. சிறுவர் விளையாட்டுச் சாதனங்கள் துருப்பிடித்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
 பூங்காக்களில் தற்போது பூச்சிகள், பாம்புகள் காணப்படுகின்றன. திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் எனும் காரணத்துக்காக பூங்காக்கள் பராமரிக்கப்படுவதில்லை. மக்கள் வரிப் பணத்தில் மக்களுக்காக அமைக்கப்பட்ட பூங்காக்களைப் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com