கிராம சபைக் கூட்டத்துக்கு வராமல் அதிகாரிகள் அலட்சியம்: கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்ததால் பரபரப்பு

ஜடையம்பாளையம் ஊராட்சியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கிராம சபைக் கூட்டத்துக்கு அதிகாரிகள் வரத் தாமதமானதால்

ஜடையம்பாளையம் ஊராட்சியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கிராம சபைக் கூட்டத்துக்கு அதிகாரிகள் வரத் தாமதமானதால் ஏமாற்றமடைந்த மக்கள் கூட்டத்தைப் புறக்கணித்தனர். இதனால் கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஜடையம்பாளையம் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி புதன்கிழமை காலை 11 மணிக்கு ஆலாங்கொம்பில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என ஒன்றிய அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூட்ட அலுவலகத்துக்கு புதன்கிழமை காலை வரத் துவங்கினர். காலை 11 மணி முதல் பகல் 12.30 மணி வரை அலுவலகத்தில் மக்கள் காத்திருந்தும், ஊராட்சி அலுவக செயலர் உள்ளிட்ட எந்த அரசு அதிகரிகளும் வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த மக்கள், காரமடை வட்டார வளர்ச்சி அலுவலரைத் தொடர்பு கொண்டு கூட்டம் நடக்காததைத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் கொடுத்த தகவலின்பேரில் உடனடியாக இரும்பறை ஊராட்சி மன்றத்தில் கூட்டம் நடத்தச் சென்றிருந்த ஒன்றிய அலுவலக சிறப்பு அலுவலர் ஜடையம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அங்கு காத்திருந்த கிராம மக்களிடம் கூட்டம் தொடங்க காலதாமதம் ஆனதற்கு மன்னிப்புப் கேட்டுக்கொண்டு கூட்டத்தை தொடங்கலாம் என்று கூறினார். 
ஆனால், பாதிக்கு மேற்பட்டோர் சென்றுவிட்டதாலும், குறித்த நேரத்துக்கு வராமல் ஒன்றரை மணிநேரம் கழித்து வந்து நடத்துவதற்கு கண்டனம் தெரிவிப்பதாகக் கூறி பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்துச் சென்றனர். இதனால் கூட்டம் நடைபெறவில்லை. 
பொள்ளாச்சி அருகே புறக்கணிப்பு:
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், எஸ்.மலையாண்டிபட்டினத்தில் புதன்கிழமை கிராம சபைக் கூட்டம் நடந்தது. இதில், கடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதா? என்றும் ஊராட்சி வரவு செலவு கணக்குகள், சாக்கடை வசதி செய்யாதது குறித்தும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அதிகாரிகள் முறையாக பதில் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, கிராம சபைக் கூட்டத்தை  பொதுமக்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர்.
பிற பகுதிகளில்:
அன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குப்பேபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு பொதுமக்களின் வருகை குறைவாக இருந்ததால் மதியம் 1 மணி வரை கூட்டம் நடைபெறவில்லை. அதன் பிறகு தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களை வைத்து கூட்டம் நடைபெற்றது. அன்னூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட பல ஊராட்சிகளில் இந்த பணியாளர்களை வைத்தே கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் பொதுமக்களின் வருகை குறைவாகவே இருந்தது. 
குப்பனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் நியாய விலைக் கடைகளில் நாட்டுச் சர்க்கரை விநியோகிக்க வேண்டும், ஆத்திக்குட்டை பகுதியில் நியாய விலை கடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் 
பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரிசிபாளையம், நாச்சிபாளையம், பாலத்துறை, வழுக்குப்பாறை, சீரபாளையம், மலுமிச்சம்பட்டி, மயிலேறிபாளையம், பிச்சனூர், மாவுத்தம்பதி ஆகிய 9 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com