சுதந்திரமாக வாழ குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்: எழுத்தாளர் கிருங்கை சேதுபதி

சுதந்திரமாக வாழ குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று எழுத்தாளர் கிருங்கை சேதுபதி தெரிவித்தார்.

சுதந்திரமாக வாழ குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று எழுத்தாளர் கிருங்கை சேதுபதி தெரிவித்தார்.
கோவை விஜயா பதிப்பகம் சார்பில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியையொட்டி புதன்கிழமை "விஞ்ஞான உலகில் குழந்தைகள் இலக்கியம்' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:
நம் குழந்தைகளை கோயிலுக்கும், திருமண நிகழ்வுக்கும் அழைத்துச் செல்கிறோம். ஆனால், புத்தகக் கண்காட்சிகளுக்கு அழைத்துச் செல்ல முடியாத இயந்திரமயமான கல்வி உலகில் நாம் சிக்கிக் கொண்டுள்ளோம். இன்றைய விஞ்ஞான உலகம் அறிவியல் சார்ந்தது அல்ல, இயந்திரமயமானது. 
நான் முதன்முதலில் படித்த குழந்தை இலக்கியம் பாரிமகளிரின் பாடலைத்தான். குழந்தைகளின் சித்திரச் சுவடிகளை சித்திரிக்கக் கூடிய படைப்புகள் சங்க காலம் முதல் தற்போது வரை வந்து கொண்டுதான் இருக்கின்றன.  உலகம் முழுவதும் ஓலைச் சுவடிகளில் இருந்து தற்போது இணையம் மற்றும் மின்னஞ்சல் வழியாக குழந்தை இலக்கியம் உலவி வருகிறது. இலக்கியத்துக்கு எப்போதும் அழிவு இல்லை.
ஆனால், யாருக்காக குழந்தை இலக்கியம் படைக்கப்படுகிறதோ அவர்களால் படிக்க முடியாமல், சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறது. இலக்கியத்தின் பக்கம் குழந்தைகள் செல்ல முடியாமல் பெற்றோர் தங்களது ஆசைகளை குழந்தைகளின் மீது திணிக்கின்றனர். 
குழந்தைகளிடத்தில் அன்பைச் செலுத்த வேண்டும். செல்லம் என்பது அன்பின் அடையாளம். மாறாக குழந்தைகளிடத்தில் செல்லிடப்பேசியைக் கொடுத்து அதனுடன் 24 மணி நேரம் வாழக் கூடிய உலகத்தை பெற்றோர் கொடுக்கின்றனர். ஓடி,  ஆடி விளையாட வேண்டிய குழந்தைகளை பொம்மையாக வாழக் கற்றுக் கொடுக்கின்றனர். மேலும் குழந்தைகளை தாய்மொழியில் இருந்து பிரிக்கின்றனர். தாய்மொழியில் கற்கவிடாமல் அவர்களைத் தடுத்தால்,  சங்க இலக்கியத்தில் உள்ள பெருமைகளை எவ்வாறு அவர்களுக்கு கற்றுக் கொடுக்க முடியும்?
தமிழை உணர்ந்து படித்த குழந்தைகள் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளனர். தற்போது ஆங்கில வழிக் கல்வி குழந்தைகள் மீது திணிக்கப்படுகிறது. எதிர்காலத் தலைமுறையினர் தாய்மொழியில் கற்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தவில்லை என்றால் நுகர்வு கலாசாரத்துக்கு பலியாகக் கூடும். பாடல்களையும், கதைகளையும் சுமந்து சுதந்திரமாக வாழ  குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.
இதில் கவிஞர்கள் செல்லகணபதி,   அம்சப்பிரியா,  விஜயா பதிப்பக நிறுவனர் மு.வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், கோணங்கி ஆகியோர் உரையாற்றினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com