கோவை அருகே வீட்டை சேதப்படுத்திய ஒற்றை யானை

தேவையம்பாளையத்தில் சனிக்கிழமை இரவு புகுந்த "ஒற்றை யானை விநாயகன்' தோட்டத்து வீட்டை இடித்து நாசம் செய்தது.

தேவையம்பாளையத்தில் சனிக்கிழமை இரவு புகுந்த "ஒற்றை யானை விநாயகன்' தோட்டத்து வீட்டை இடித்து நாசம் செய்தது.
  கோவை மாவட்டம், சின்னத்தடாகம் பகுதியில்  புகுந்துள்ள ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் சுற்றித் திரிந்தபடி விளைநிலங்ககள், வீடுகள் உள்ளிட்ட பொதுமக்களின் உடமைகளை சேதப்படுத்தி வந்த நிலையில்,  பாப்பநாயக்கன்பாளையத்தில் வேட்டைத் தடுப்பு காவலர் வெங்கடேசனை தாக்கிக் கொன்றது.  பெரியநாயக்கன்பாளையத்தில் விஜயலட்சுமி என்பவரை கடந்த வாரம் தாக்கிக் கொன்றது. வனத் துறையினரின் தொடர் துரத்தல் காரணமாகவும்,  இந்த யானையை துரத்த கும்கி யானைகள் வரவழைக்கப்பட்ட நிலையிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலமலை வனப் பகுதிக்குள் ஒற்றை யானை விநாயகன் தன் இடத்தை மாற்றிக் கொண்டது.
 இந்நிலையில், தேவையம்பாளையம் கிராமத்துக்குள் வியாழக்கிழமை புகுந்த இந்த யானை வாழை மரங்களை சேதப்படுத்தியது. மீண்டும் இதே பகுதிக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த ஒற்றை யானை ஜெயம்மாள், பாபு குடும்பத்தினருக்குச்  சொந்தமான தோட்டத்துக்குள் புகுந்து ஓட்டுவீட்டை இடித்து நாசப்படுத்தியது. பின்னர் கோவனூருக்குள் சனிக்கிழமை புகுந்த இந்த யானை சோளப் பயிர்களை சாப்பிட்டுச் சென்றது.
  இது குறித்து பெ.நா.பாளையம் வனத் துறையினர் கூறியதாவது: 
ஒற்றை யானை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விரைவில் பிடித்துவிடுவோம் என்றனர்.
  இதற்கிடையில், சோமையம்பாளையத்தில் முகாமிட்டுள்ள 12 யானைகளில் 8 யானைகள் வனப் பகுதிக்குள் துரத்தப்பட்ட நிலையில் இன்னும் 4 யானைகள் யமுனா நகர் அருகே உள்ள முள்புதர்களிலேயே பதுங்கியிருக்கின்றன. காட்டு யானைகளைப் பிடிக்க தற்போது தெப்பக்காடு முகாமிலிருந்து வசீம் என்ற கும்கி யானையும் வரவழைக்கப்பட்டுள்ளது. பெரியதடாகத்தில் ஏற்கெனவே வரவழைக்கப்பட்ட பொம்மன், சேரன், விஜய் ஆகிய கும்கிகளுடன் வசீமையும் காட்டு யானைகளைத் துரத்தும் பணியில் வனத் துறையில் ஈடுபடுத்த உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com