கோவை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் மூடப்படாது: மண்டல அலுவலர் உறுதி

கோவை மண்டல கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அலுவலகம் மூடப்படாது என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள அதன் மண்டல அலுவலர்  சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கோவை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் மூடப்படாது: மண்டல அலுவலர் உறுதி

கோவை மண்டல கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அலுவலகம் மூடப்படாது என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள அதன் மண்டல அலுவலர்  சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கோவையில் செயல்பட்டு வரும் மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் மூடப்பட உள்ளதாக அண்மையில் ஆதாரமற்ற தகவல்கள் பரவின. 

ஆனால்,  மத்திய அரசிடம் அதுபோன்ற எந்தத் திட்டமும் கிடையாது. மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் கோவையில் தொடர்ந்து செயல்படும்.

தற்போது,  கோவை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் வாடகை செலுத்தி மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் செயல்படுகிறது. இதற்கு சொந்தக் கட்டடம் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.  

கடவுச்சீட்டு கோரி விண்ணப்பிப்போரின் காவல் துறை சரிபார்ப்புப் படிவங்கள் தற்போது காகிதங்களில் உள்ளன. அவற்றை முழுமையாக கணினிமயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக காவல் நிலையங்களுக்கு  சிறு மடிக்கணினி (டேப்லெட்) வழங்கப்படும்.  

அதில் பிரத்தியேக செயலியை பதிவிறக்கம் செய்து,  அதன்மூலம் காவல் துறை சரிபார்ப்பு விவரங்கள் பதிவு செய்யப்படும். டேப்லெட் மூலமாகவே புகைப்படம் எடுப்பது,  மின்னணு முறையில் கையொப்பமிடுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

தற்போதைய முறையில் காவல் துறை சரிபார்ப்புப் பணி மேற்கொள்ள கோவை மண்டலத்தைப் பொருத்த வரை சராசரியாக 19 நாள்களாகிறது. சேலம் புறநகர் மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 30 நாள்களும்,  நீலகிரி மாவட்டத்தில் 10 நாள்களும் ஆகின்றன. புதிய நடைமுறை மூலம் 3 அல்லது 4 நாள்களில் இந்தப் பணி நிறைவடையும். இன்னும் ஓரிரு மாதங்களில் இப்புதிய முறை அமல்படுத்தப்படும்.

கோவை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தின் கீழ் கோவை,  திருப்பூர்,  நீலகிரி, ஈரோடு,  சேலம்,  நாமக்கல் மாவட்டங்கள் உள்ளன. தலைமை அஞ்சல் நிலையங்களில் கடவுச்சீட்டு சேவையைப் பெறும் வசதி சேலம் தலைமை அஞ்சல் நிலையத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக திருப்பூர், நாமக்கல் தலைமை அஞ்சல் நிலையங்களிலும் கடவுச்சீட்டு சேவை வசதிகள் தொடங்கப்படும்.

கடவுச்சீட்டு கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு வழக்கமாக 25 நாள்களில் கடவுச்சீட்டு வழங்கப்படுகிறது.  காவல் துறை சரிபார்ப்புப் பணிக்கு மட்டுமே அதிக நாள்கள் ஆகிறது.  முகவரி,  தேசியம்,  குற்றச் செயல்களைச் சரிபார்த்தல் ஆகியவற்றுக்காக காவல் துறை சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுகிறது.

காவல் துறை சரிபார்ப்புப் பணிகளை விரைவாக மேற்கொள்வது,  தேவையற்ற கேள்விகளைத் தவிர்ப்பது தொடர்பாக, காவல் துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி,  உரிய அறிவுறுத்தல்கள் வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

மேலும், கல்வி நிலையங்களில் கடவுச்சீட்டு மேளா நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். 

கோவை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் 33 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். பணியாளர் பற்றாக்குறை இருந்தபோதும், நாள்தோறும் சராசரியாக 950 கடவுச்சீட்டுகள் தயார் செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

தட்கல் முறையில் 3 நாள்களில் கடவுச்சீட்டு வழங்கப்படுகிறது. அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

மேலும்,  வாக்காளர் அடையாள அட்டை,  ஆதார் அட்டை,  பான் கார்டு (அ) குடும்ப அட்டை ஆகியவை இருந்தால்,  கூடுதல் கட்டணமின்றி சாதாரண முறையிலேயே 3 அல்லது 4 நாள்களில் கடவுச்சீட்டு வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. 

பொதுமக்கள் தங்களது குறைகள்,  பிரச்னைகளைத் தெரிவிப்பதற்காகவும், சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் 94879 92991 என்ற செல்லிடப்பேசி எண்ணை கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் தொடர்புகொள்ளலாம்.  

கோவை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் 2017-ஆம் ஆண்டில் 1,82,751 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதனை  சரிபார்த்து 1,73,147 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன  என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com