கோவை மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் குடிநீர் இணைப்பு

கோவை மாவட்டத்தில் குடிநீர் இணைப்புக்காக விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இணைப்புகள் வழங்கப்படும் என்று நகராட்சி

கோவை மாவட்டத்தில் குடிநீர் இணைப்புக்காக விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இணைப்புகள் வழங்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
மத்திய - மாநில அரசுகள் மூலமாக வழங்கப்படும் கடன் திட்டங்கள் குறித்தும், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் அனைத்துத் துறை அலுவலர்கள், வங்கி மேலாளர்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் டாக்டர் விஜயகார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் அம்மன் கே.அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:
தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு படித்த இளைஞர்கள், பொதுமக்கள் தொழில் தொடங்குவதற்கும், சிறு, குறு வியாபாரிகள், தொழில் முனைவோர், மகளிர் முன்னேற்றத்துக்காக தனி நபர் கடன்கள், மானியக் கடன், மானியம் அல்லாத கடன், பிணையமில்லாத கடன், தாட்கோ கடன் உதவி, மாவட்டத் தொழில் மையக் கடன் திட்டம் போன்ற பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தக் கடன் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதிதாக கடன் வழங்குவதற்காக ஒன்றிய அளவில் முகாம்கள் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைவில் செயல்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
மாவட்டத்தில் நிலவிய கடும் வறட்சி காரணமாக மாநகராட்சி உள்பட மாவட்டத்தின் அனைத்து நிலையிலான உள்ளாட்சி அமைப்புகளிலும் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பொங்கல் விழாவை முன்னிட்டு அரசு விதிகளுக்கு உள்பட்டு, குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் குடிநீர் இணைப்புகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேநேரம், குடிநீர் இணைப்புக்காக சாலையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு சாலையைத் தோண்டாமல் குழாய் அமைக்கும் முறையைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலையைத் தோண்டி சேதம் விளைவிக்கும் ஒப்பந்ததாரர்கள், பிளம்பர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காந்திபுரத்தில் மேம்பாலம் கட்டப்பட்டதால் போக்குவரத்து சுமார் 45 சதவீதம் குறைந்துள்ளது. காந்திபுரத்தில் செயல்படும் பேருந்து நிலையங்களை வெள்ளலூருக்கு மாற்றவும், அங்கு ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்கவும் ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீட்டுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

கூடுதல் ஊதியம் தேவைப்படாதவர்கள் முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கலாம்
 கோவை மாநகராட்சியில் குப்பை வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை உயர்த்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  தமிழக எம்.எல்.ஏ.க்கள் ஊதியம் குறைவாக இருப்பதால் சிரமங்கள் ஏற்படுவதாகக் கூறினர். இதனால் அவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆண்டுக்கு ரூ.25 கோடி மட்டுமே செலவாகும்.
பல முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த ஊதிய உயர்வு பயனளிக்கும். இந்த ஊதிய உயர்வை வைத்து திமுகவினர் அரசியல் செய்கின்றனர். ஊதியம் உயர்த்தப்பட்டதில் விருப்பம் இல்லாத எம்.எல்.ஏ.க்கள் அந்தத் தொகையை முதல்வரின் நிவாரண நிதிக்கு அளித்துவிடலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com