சிறுவனுக்கு கவனக் குறைவாக அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் மீதுநடவடிக்கை கோரி மனு

நான்கரை வயது சிறுவனுக்கு கவனக் குறைவாக அறுவை சிகிச்சை செய்து உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்திய தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்

நான்கரை வயது சிறுவனுக்கு கவனக் குறைவாக அறுவை சிகிச்சை செய்து உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்திய தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த சண்முகபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் கே.வினோத்குமார் சனிக்கிழமை அளித்துள்ள புகார் மனு விவரம்:
எனது நான்கரை வயது மகன் விஷ்ணு வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து, கோவை ராம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2017 செப்டம்பர் 28-ஆம் தேதி சேர்த்தோம். பின்னர் அங்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். சிகிச்சை முடிந்து சில நாள்களுக்குப் பின்னர் வீடு திரும்பினோம். மேலும், விஷ்ணுவுக்கு சிகிச்சைக்காக ரூ. 20 லட்சம் செலவு செய்தோம். அதே வேளையில், வீடு திரும்பிய பின்னரும் விஷ்ணுவின் வயிற்று வலி குணமடையவில்லை. மேலும், சிறுநீர் கழிக்க முடியாமலும் அவதிக்குள்ளானான். அதைத்தொடர்ந்து, அதே மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது, சிறுநீரகம் வீங்கியிருப்பது தெரியவந்தது. அதன்பின், மருந்து, மாத்திரை சாப்பிட்டால் சரியாகி விடும் என்று கூறி மருத்துவர்கள் எங்களைத் திருப்பி அனுப்பினர்.
அதன்பின்னர், வேறு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, சிறுநீரகம் அருகே துணி, பஞ்சு இருப்பது தெரியவந்தது. எனவே, முதலில் அறுவை சிகிச்சை செய்தபோது மருத்துவர்கள் கவனக் குறைவாக துணி, பஞ்சை உள்ளே வைத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சிறுநீரகத்தில் இருந்த துணி, பஞ்சு அகற்றப்பட்டது. எனவே, கவனக்குறைவாக செயல்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com