மத்திய அரசுப் பள்ளிகளில் பொங்கலுக்கு விடுமுறை இல்லை: மாவட்ட ஆட்சியரிடம் இளைஞர், மாணவர் சங்கத்தினர் மனு

கோவையில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் திருநாளுக்கு விடுமுறை அளிக்கப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இளைஞர், மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம்

கோவையில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் திருநாளுக்கு விடுமுறை அளிக்கப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இளைஞர், மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜே.ரவீந்திரன், செயலர் கே.எஸ்.கனகராஜ், பொருளாளர் சீலாராஜ் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு விவரம்:
தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு விழாவாகப் பொங்கல் திருவிழா 3 நாள்கள் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் விழாவுக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) தொடங்கி செவ்வாய்க்கிழமை (ஜனவரி 16) முடிய, தொடர்ந்து 5 நாள்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் செயல்படும் மத்திய அரசின் 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விழாவுக்கு என்று எந்த விடுமுறையும் அளிக்கப்படவில்லை. கோவையில் செளரிபாளையம், சூலூர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், திங்கள்கிழமை கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொங்கல் விழா ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தசரா, தீபாவளி போன்ற மதம் சார்ந்த பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கும் பள்ளி நிர்வாகம், பொங்கலுக்கு மட்டும் விடுமுறை அளிக்காதது கண்டனத்துக்குரியது.
எனவே, கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் தினேஷ், செயலர் கேப்டன் பிரபாகரன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், "மத்திய அரசின் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், இந்த ஆண்டு பொங்கல் விழாவுக்காக விடுமுறை எதுவும் அளிக்கப்படாதது ஏற்புடையது அல்ல. தமிழகத்துக்கு சம்பந்தமில்லாத குருகோவிந்த் சிங் பிறந்த நாள், மகாவீர் ஜயந்தி, ஜென்மாஷ்டமி , குருநானக் பிறந்த நாள், கோவர்தன பூஜை , புத்த பூர்ணிமா போன்ற நாள்களுக்கு விடுமுறை அளிக்கும் மத்தியக் கல்வி வாரியம், தமிழகம் போன்ற மாநிலங்களில் கொண்டாடப்படும் விழாக்களுக்கும் உரிய மதிப்பு அளித்து விடுமுறை அளிக்க வேண்டும். கோவையில் உள்ள பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்படாவிட்டால் அந்தப் பள்ளிகளை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்று அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே, பொங்கல் விழாவுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், இந்த ஆண்டு பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை வருவதால் திங்கள்கிழமை வழக்கம்போல பள்ளிகள் செயல்பட இருப்பதாகவும் பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com