தங்க நகைத் தொழிலாளர்களைப் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்: மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு

தங்க நகைத் தொழிலாளர்களைப் பாதுகாக்க பொற்கொல்லர் நலவாரியச் செயல்பாட்டை மேம்படுத்த வலியுறுத்தி தங்க நகைத் தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தங்க நகைத் தொழிலாளர்களைப் பாதுகாக்க பொற்கொல்லர் நலவாரியச் செயல்பாட்டை மேம்படுத்த வலியுறுத்தி தங்க நகைத் தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 இதுகுறித்து, கோயம்புத்தூர் தங்கநகைத் தொழிலாளர் யூனியன் (சிஐடியூ) சார்பில், அதன் பொதுச்செயலாளர் பி.சந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரனிடம் அளிக்கப்பட்டுள்ள மனு விவரம்:
 கோவை மாநகரில் ஆயிரக்கணக்கானோர் பல தலைமுறைகளாக கைவினைத் தங்க நகைகள் செய்துவருகின்றனர். இந்நிலையில், தங்கத்தின் விலையில் நாள்தோறும் ஏற்ற, இறக்கம் காரணமாகவும், பல்வேறு நவீன இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாலும் கைவினை தங்கநகைத் தொழிலாளர்கள் வேலை இழந்து, வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 இதன் காரணமாக சிறிய தங்கநகைப் பட்டறைகளை அதன் உரிமையாளர்கள் மூடிவிட்டு, தினக் கூலிக்காக பெரிய மற்றும் சிறிய தங்கநகைத் தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், தொழிற்சாலையில் அவர்களது உழைப்பு சுரண்டப்படுகிறது.
 தொழிலாளர் நலச் சட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை. மேலும், வட மாநிலங்களில் இருந்து வந்துள்ள தொழிலாளர்களின் நிலை மோசமாக உள்ளது. உணவு, தங்குமிடம் கொடுத்துவிட்டு ஆண்டுக்கு ஓர் முறை முறையான ஊதியம் வழங்கப்படுவதில்லை. 
 எனவே, தங்கநகைத் தொழிற்சாலைகளில் தொழிலாளர் நலச் சட்டத்தை பின்பற்றும் வகையில் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.  சட்ட, சமூகப் பாதுகாப்பு இல்லாமல் உழைக்கும் தங்கநகைத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலிச் சட்டத்தை செயல்படுத்தி மாதம் ரூ. 20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யவேண்டும்.
 தங்க நகைத் தொழிலாளர்களைப் பாதுகாக்க பொற்கொல்லர் நலவாரியத்தை மேம்படுத்த வேண்டும். நலிவடைந்த தங்க நகைத் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு இலவச வீட்டுமனைகளை அரசே ஏற்படுத்தித்தர வேண்டும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ உதவி கேட்டு மனு: கோவை கணபதியைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் சந்திரன். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு ஸ்ரீஹரி (5), பூமிகா (3) என இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பூமிகாவுக்கு மூளை நரம்பில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பார்வை பாதிப்பு மற்றும் வாய் பேச முடியாத நிலையில் உள்ளார். இதற்காக தனியார் மருத்துவமனையில் பூமிகாவின் பார்வை பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்காக மாதம் ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் செலவு ஆகிறது. ஆனால் குறைந்த வருமானமே கிடைப்பதால் குடும்பத்தை நடத்த முடியாமலும், மருத்துவ சிகிச்சையைத் தொடர முடியாமலும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே மருத்துவ சிகிச்சை கிடைக்க உரிய நிதியுதவி அளிக்க வேண்டும் என சிறுமியின் தந்தை சந்திரன் அளித்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். 
நியாயவிலைக் கடை அமைக்கக் கோரிக்கை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றியம், ஒடையகுளம் பேரூராட்சிக்கு உள்பட்ட சுள்ளிமேட்டுப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நியாயவிலைக் கடையில் பொருள்கள் வாங்க 5 கி.மீ. தொலைவில் உள்ள வேட்டைக்காரன்புதூர் நியாயவிலைக் கடைக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, பழங்குடியின மக்கள் குடியிருப்புக்கு அருகே நியாயவிலைக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகை சேவை அறக்கட்டளை நிறுவனர் மு.ரவிசந்திரன் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com