மாணவர்களை வெளியேற்ற முயன்ற பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் முற்றுகை

மாணவர்களை வெளியேற்ற முயன்ற அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து பெற்றோர்கள் புதன்கிழமை பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்களை வெளியேற்ற முயன்ற அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து பெற்றோர்கள் புதன்கிழமை பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, டவுன்ஹால் வைசியாள் வீதியில் ஆரிய வைசிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.  1927-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி 1946 ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்தப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் இருபாலரும்,  6 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் மாணவிகள் மட்டும் பயின்று வருகின்றனர்.  தற்போது 59 பேர் இந்தப் பள்ளியில் பயின்று வருகின்றனர். 
இந்த நிலையில், பள்ளியின் கட்டடம் பழுதடைந்து உள்ளதால்  மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த  நீதிமன்றம் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இந்நிலையில்,  வழக்கம்போல புதன்கிழமை பள்ளிக்கு வந்த மாணவர்களைத் தடுத்து நிறுத்திய பள்ளி நிர்வாகத்தினர் இடமாறுதல் சான்றிதழ் பெற்றுக் கொண்டு அருகில் உள்ள 4 பள்ளிகளில் சேர்ந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். இதையடுத்து,  மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பள்ளியில் இருந்து தங்கள் குழந்தைகளை வெளியேற்றும் முடிவை ஏற்க மறுத்த பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கடை வீதி போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பள்ளி கட்டடம் நல்ல நிலையில் உள்ளதாகவும், வேறு காரணத்துக்காக கட்டடத்தை இடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர். இதையடுத்து,  நடப்பு கல்வியாண்டு இறுதி வரையில் பள்ளி செயல்படும் என்றும், விருப்பம் உள்ளவர்கள் இடமாறுதல் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com