தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து கோவையில் பல்வேறு இடங்களில் போராட்டம்

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து கோவையில் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து கோவையில் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டல் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் வி.ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக் குழு உறுப்பினர் சி.பத்மநாபன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் கே.சி.கருணாகரன், யு.கே.வெள்ளிங்கிரி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் வி.எஸ்.சுந்தரம், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் எம்.ஆறுமுகம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேல், சிவசாமி, தேவராஜ், அஷ்ரப்அலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தபெதிக
கோவை டாடாபாத் பகுதியில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மாநில அமைப்பாளர் ஆறுச்சாமி, மதிமுக இளைஞரணி மாநிலச் செயலர் வே.ஈஸ்வரன், சேதுபதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சுசி.கலையரசன், மக்கள் அதிகாரம் அமைப்பின் சூர்யா, புரட்சிகர விடுதலை முன்னணியின் மலரவன், ரஹூப், முஸ்தபா, கரீம் உள்ளிட்ட சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சிங்காநல்லூர் உழவர் சந்தை எதிரில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநிலப் பொருளாளர் சி.தங்கராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஏ.கே.சண்முகம், ஏ.எஸ்.பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
63 பேர் கைது
எஸ்டிபிஐ கட்சி சார்பில் உக்கடம் பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் ஏ.முஸ்தபா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஏ.ஏ.அப்துல் காதர், தெற்கு மாவட்டத் தலைவர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொதுச் செயலர்கள் ராஜா உசேன், இப்ராஹிம் பாதுஷா, வர்த்தக அணி இணைச் செயலர் மீன் கரீம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார். இந்தப் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 63 பேரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் இரவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
நாம் தமிழர் கட்சி
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலர் அப்துல் வஹாப் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.
வழக்குரைஞர்கள்
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் பகுதியில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு, மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் நிர்வாகி வழக்குரைஞர் ச.பாலமுருகன் தலைமை தாங்கினார். இதில், குற்றவியல் வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் கலையரசன், வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் சதீஷ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.
கோவையில் பலத்த பாதுகாப்பு
கோவை, மே 23: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தின் எதிரொலியாக கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர். இதில் ஏற்பட்ட வன்முறையில் மாணவி உள்பட 10 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, தமிழகம் முழுவதிலும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவியது.
இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவையிலும் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தப்பட்ட வ.உ.சி.மைதானம், கொடிசியா ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து வ.உ.சி.மைதானத்தில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த நியாஸ், சபீம், சதாம், சாதிக் பாட்ஷா ஆகிய 4 பேர் செவ்வாய்க்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் அவர்களைப் பிடித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர்இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து பிணையில் விடுவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com