தொடங்கியது ஆயுத பூஜைப் பொருள்கள் விற்பனை

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு கோவை கடை வீதிகளில் பூஜைப் பொருள்களின் விற்பனை தொடங்கியது.

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு கோவை கடை வீதிகளில் பூஜைப் பொருள்களின் விற்பனை தொடங்கியது.
 தொழில் நகரமான கோவையில் ஆயுத பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். பொதுமக்கள், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பூஜைக்குத் தேவையான மலர்கள், பழங்கள், பொரி உள்ளிட்ட பூஜைப் பொருள்களை வாங்குவர். இதனால், வழக்கமான மார்க்கெட்டுகளான பூ மார்க்கெட், எம்.ஜி.ஆர். மார்க்கெட், குமரன் மார்க்கெட்டுகளைத் தவிர, மக்கள் அதிகம் கூடும் பல இடங்களிலும் பூஜை பொருள்கள் விற்பனைக்கு அதிக அளவில் கடைகள் அமைக்கப்படுவது வழக்கம்.
 அதன்படி, இந்த ஆண்டு ஆயுத பூஜைக்காக கோவை மார்க்கெட்டுகளில் மலர்கள், பழங்கள் குவிந்துள்ளன. இருப்பினும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அனைத்துப்  பொருள்களின் விலையும் சற்று உயர்ந்திருப்பதாகவே கூறுகிறார் கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கத் தலைவர் வி.வி.எஸ்.செல்வகுமார்.
 இதுகுறித்து அவர் கூறுகையில், "கோவைக்கு ஒசூர், சத்தியமங்கலம், ராயக்கோட்டை, நிலக்கோட்டை போன்ற இடங்களில் இருந்து சராசரியாக தினமும் 2 டன் மலர்கள் வரை விற்பனைக்கு வரும். ஆனால், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்காக மட்டும் சுமார் 10 டன் மலர்கள் வந்துள்ளன. வரத்து அதிகமாகியிருந்தாலும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் லாரி வாடகை உயர்ந்திருப்பதால் மலர்களின் விலையும் சற்று உயர்ந்துள்ளது' என்றார்.
 கோவை பூ மார்க்கெட்டில் மலர்களின் செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் (கிலோவுக்கு): சாமந்தி ரூ. 60 முதல் ரூ. 200, ரோஜா ரூ. 80 முதல் ரூ. 100, சம்பங்கி ரூ. 160, அரளி ரூ. 240, முல்லை ரூ. 320 முதல் ரூ. 400, துளசி ரூ. 80 முதல் ரூ. 90 வரை.
 இதேபோல, பழங்களின் விலையும் சராசரியாக 10 சதவீதம் வரை உயர்ந்திருப்பதாக பழ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 
 அதன்படி, கோவையில் செவ்வாய்க்கிழமை ஒரு கிலோ ஆப்பிள் ரூ. 120க்கு விற்பனையானது. ஆரஞ்சு ரூ. 80க்கும், சாத்துக்குடி ரூ. 80க்கும், திராட்சை ரூ. 120க்கும், மாதுளை ரூ. 150க்கும் விற்பனையாகின. 
 இதேபோல ஒரு மூட்டை பொரி ரூ. 450 முதல் ரூ. 550 வரையும் விற்பனையானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com