பன்றிக் காய்ச்சல் பாதிப்பை எதிர்கொள்ள விழிப்புணர்வு அவசியம்: சுகாதாரத் துறையினர் அறிவுரை

பன்றிக் காய்ச்சல் தொடர்பாக பொதுமக்களிடம்   விழிப்புணர்வு அவசியம் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பன்றிக் காய்ச்சல் தொடர்பாக பொதுமக்களிடம்   விழிப்புணர்வு அவசியம் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த வாரம் முதல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே சுகாதாரத் துறையினரின் குற்றச்சாட்டாக உள்ளது.
காற்று மற்றும் ஒருவரை ஒருவர் தொடுவதால் பரவக் கூடியது தான் எச்1என்1 இன்புளுயன்சா வைரஸ் எனப்படும் பன்றிக் காய்ச்சல். எச்1என்1 என்ற இன்புளுயன்சா வைரஸ் ஏ, பி மற்றும் சி என மூன்று வகையாக பிரித்து பார்க்கப்படுகிறது. இதில் இன்புளுயன்சா ஏ-வால் அதிக அளவிலும், இன்புளுயன்சா சி-யால் குறைவாகவும் பாதிக்கப்படுகின்றனர். 
 எப்படி பரவுகிறது... 
முன்பு பன்றியில் உருவாகும் ஒருவகை வைரஸ் கிருமி மனிதர்களிடம் தொற்றியது. தற்போது மனிதர்களிடம் இருந்தே மனிதர்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவி வருகிறது. கடும் காய்ச்சல், தொண்டை வலி, இருமல், சளி, உடல்வலி, தலைவலி, சோர்வு ஆகியவை பன்றிக் காய்ச்சலின் அறிகுறி ஆகும். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரின் தும்மல் மற்றும் இருமலின் மூலமாக வைரஸ் கிருமி பரவுகிறது. மேலும், வைரஸ் கிருமிகள் படிந்துள்ள பொருள்களை கைகளால் தொடும்போது கைகளில் ஓட்டிக் கொள்ளும்.  கைகளை கழுவாமல் மூக்கு, வாய் மற்றும் கண்களைத் தொடும்போதும் வைரஸ் தொற்று ஏற்படுகிறது.
எனவே, பொது இடங்களில் அதிக அளவில் இருப்பவர்கள் முகக் கவசம் அணிவது, கைகுட்டை பயன்படுத்துவது, வெளியே சென்று வீடு திரும்பும் போது கைகளை சுத்தமாக கழுவது போன்றவை மூலம் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.
சிகிச்சை யாருக்கு தேவை... 
இன்புளுயன்சா ஏ மற்றும் பி வகை வைரஸ் தொற்றால் ஆரோக்கியமான உடல் நலம் உள்ளவர்களுக்கு சளிக் காய்ச்சல், தொண்டை வலி, உடல் மற்றும் தலைவலி, வயிற்றுப் போக்கு, வாந்தி போன்ற பாதிப்புகள் காணப்படும் போது பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 
அதேநேரத்தில் டாமிப்ளூ மாத்திரை மற்றும் ஓய்வு எடுப்பது மூலம் காய்ச்சலில் இருந்து குணமடைய முடியும். நோய் தொற்று உள்ளவர்களின் தொண்டைப் பகுதியில் உள்ள நுண்கிருமிகளை பரிசோதனை செய்வது மூலம் நோய் பாதிப்பை உறுதி செய்ய முடியும்.
அதே நேரத்தில் இன்புளுயன்சா சி வகை வைரஸ் என்பது ஏற்கெனவே கட்டுப்பாடற்ற சர்க்கரை, சிறுநீரக கோளாறு, உயர் ரத்த அழுத்தம், வயதானர்கள் ஆகியோருக்கு எளிதில் பாதிக்க கூடியது. கடும் காய்ச்சல், நெஞ்சு சளி, தொண்டை வலி போன்ற பாதிப்புகள் காணப்பட்டால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை பெற வேண்டியது அவசியம். 
அதிகம் பாதிக்கப்படுபவர்கள்... 
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள முதியவர்கள் மற்றும் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், நுரையீரல், கல்லீரல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படும்போது அவர்களின் உடல் நிலைமை மேலும் மோசமடையும்.
இதனை பருவகால காய்ச்சல் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பட்சத்தில் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். 
இதுகுறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் சந்தோஷ்குமார், சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குநர் டாக்டர் பானுமதி கூறியதாவது:
தொற்று நோயாக மட்டும் இல்லாமல் ஒருவரை ஒருவர் தொடுவது மூலமாகவும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. கதவின் பிடி, ஸ்விட்ச், தண்ணீர் பாட்டில், செல்லிடப்பேசி, பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் பொருள்கள் மூலமாக வைரஸ் தொற்று ஏற்படுகிறது. கை கழுவாமல் விடுவது மூலம் குடும்பத்தில் பிறருக்கும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. டெங்கு காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்துகள் இல்லை. ஆனால், பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்துகள் உள்ளதால் அதனை உட்கொள்வது மூலம் பன்றிக் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். 
பொது இடங்களில் முக கவசத்தை பயன்படுத்துவது மூலமாகவும் காய்ச்சல் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்ற சில பாதிப்பு உள்ளவர்கள் தங்களது உடல்நலத்தை பேணி காப்பது அவசியம். கோவை மாவட்டம் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் தேவையான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதுடன் தேவையான அளவு டாமிப்ளு மாத்திரைகள் இருப்பு உள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com