ரூ. 2,000 நோட்டு புழக்கத்தால் மீண்டும் களைகட்டியது மாட்டுச் சந்தை

ரூ. 2,000 நோட்டுகள் புழக்கம் தாராளமாகியுள்ளதால், ஈரோடு கருங்கல்பாளையம் கால்நடைச் சந்தை மீண்டும் களைகட்டியுள்ளது.
ரூ. 2,000 நோட்டு புழக்கத்தால் மீண்டும் களைகட்டியது மாட்டுச் சந்தை

ரூ. 2,000 நோட்டுகள் புழக்கம் தாராளமாகியுள்ளதால், ஈரோடு கருங்கல்பாளையம் கால்நடைச் சந்தை மீண்டும் களைகட்டியுள்ளது.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய கால்நடைச் சந்தையான ஈரோடு கருங்கல்பாளையம் சந்தை வாரம்தோறும் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமையன்று அடிமாடுகள், வளர்ப்புக் கன்றுகள், வியாழக்கிழமையன்று கறவை மாடுகள், எருமைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இச்சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இவற்றைக் கொள்முதல் செய்ய தமிழகம் மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வாகனங்களோடு வரும் வியாபாரிகள் தங்களுக்குத் தேவையான மாடு, எருமைகளை வாங்கிச் செல்கின்றனர்.
வழக்கமாக கால்நடைச் சந்தைக்கு மாடுகள், எருமைகள் சராசரியாக 1,200 என்ற அளவில் வரும். ரூபாய் நோட்டுப் பிரச்னை காரணமாக கடந்த 3 வாரங்களாக மாட்டுச்சந்தை களையிழந்து காணப்பட்டது. இருப்பினும், கடந்த 2 வாரங்களை ஒப்பிடும்போது இந்த வாரம் நிலைமை சற்று முன்னேறியுள்ளது. இந்த வாரம் 600 மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.
இதற்கான காரணம் குறித்து மாட்டுச்சந்தை மேலாளர் முருகன் கூறியதாவது:
பொதுவாக அக்டோபர் முதல் பிப்ரவரி வரை மாடு, எருமைகள் விற்பனை அதிகமாக இருக்கும். கர்நாடகம், ஆந்திரம், கேரள மாநில அரசுகள் மாடு வாங்க கடன் வழங்குவதோடு, வங்கி, அம்மாநில அரசு அதிகாரிகள் நேரடியாக மாட்டுச்சந்தைக்கு வந்து மாடுகளை வாங்கித் தருவது வழக்கம். சராசரியாக ஒரு மாட்டுக்கு ரூ. 20 ஆயிரம் வரை வங்கிக் கடன் தருவதால், மாடுகள் விற்பனை அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு கேரளம், ஆந்திர மாநிலங்களில் இருந்து மட்டுமே வங்கிக் கடன் மூலமாக மாடுகளை வாங்க வந்துள்ளனர்.
கர்நாடக, மகாராஷ்டிராவில் வறட்சி நிலவுவதால் அங்கிருந்து வியாபாரிகளோ, அரசு, வங்கி அலுவலர்களோ பெருமளவில் வரவில்லை. கர்நாடகத்தில் இருந்து மாடுகளை வாங்கி ஏற்றிச் செல்ல 40 வாகனங்கள் வரை வரும். ஆனால், வியாழக்கிழமை இரு வண்டிகள் மட்டுமே வந்துள்ளன. ஆந்திரத்தில் இருந்து சராசரியாக 30 வாகனங்கள் வரை வரும். ஆனால், 10 வாகனங்கள் மட்டுமே வந்துள்ளன. எனவே, மாடுகளின் விற்பனை சரிபாதியாக குறைந்துள்ளது.
கறவை மாடு ரூ. 16 ஆயிரத்தில் இருந்து, ரூ. 32 ஆயிரம் வரையிலும், எருமை ரூ. 18 ஆயிரம் முதல் ரூ. 34 ஆயிரம் வரை விலை போகும். புதிய ரூபாய் நோட்டு அறிமுகப் பிரச்னையால் கடந்த இரு வாரமாக பாதிப்பு இருந்தது. ஆனால், இந்த வார சந்தையில் புதிய ரூ. 2,000 நோட்டுகளை வியாபாரிகள் கொண்டு வந்ததால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. விவசாயிகளைப் பொருத்தவரை மாடுகளின் விலையில் பாதிக்கு ரூ. 2,000 நோட்டுகளும், மீதி பாதிக்கு ரூ. 500 நோட்டுகளையும் வாங்கிச் சென்றனர். விவசாயிகளைப் பொருத்தவரை நடைமுறைச் செலவுகளுக்குப் புதிய நோட்டை பயன்படுத்திக் கொள்வதாகவும், பழைய 500 ரூபாய் நோட்டை வங்கியில் செலுத்தி பின் எடுத்துக் கொள்வதாகவும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com