'ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் திட்டப் பணிகள் 95 சதவீதம் நிறைவு'

ஈரோடு மாவட்டத்தில் குடிநீர்த் திட்டப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் குடிநீர்த் திட்டப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வறட்சி - குடிநீர் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் முன்னிலை வகித்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கூட்டத்தில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர்ப் பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய குடிநீர்த் திட்டப் பணிகள் குறித்தும் பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு துறை அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் குடிநீர்த் தேவைகளுக்கு என நிறைவேற்றப்படும் திட்டங்களில் நீர் ஆதாரங்கள் இருக்கக்கூடிய இடங்களைக் கண்டறிந்து அவற்றில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க அரசுத் துறை அலுவலர்கள் இப்பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த வேண்டும். ஏற்கெனவே பயன்படுத்தி வருகிற நீர் ஆதாரங்களை மேலும் செம்மைப்படுத்தி பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு அதிக அளவில் நீர் கிடைப்பதற்கான நடவடிக்கைகளையும் துறை அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் 212 குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ரூ. 6.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் குடிநீர் திட்டப் பணிகள் சுமார் 95 சதவீதம் முடிவுற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
அமைச்சர் கருப்பணன் பேசுகையில், பருவமழை பொய்த்துப்போனதன் காரணமாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் வழங்குவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்குத் தேவையான அளவு குடிநீர் வழங்குவதற்கு துறை அலுவலர்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு துறைகளிலும் உள்ள அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடிநீர் தேவையை முழுமையாக நிறைவேற்ற முடியும் என்றார்.
இதில், முன்னாள் அமைச்சர் கே.வி.இராமலிங்கம், சமூகப் பாதுகாப்புத் திட்ட இயக்குநர் மகேஸ்வரன், ஈரோடு எம்.பி. செல்வகுமார சின்னையன், எம்.எல்.ஏ.க்கள் தென்னரசு, சிவசுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com