ஈரோடு மாவட்டத்தில் நீதிமன்றத்தால் மூடப்பட்ட 153 டாஸ்மாக் கடைகளில் 4 கடைகள் மட்டுமே திறப்பு

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வந்த 153 டாஸ்மாக் கடைகளில் 4 கடைகள் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வந்த 153 டாஸ்மாக் கடைகளில் 4 கடைகள் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இயங்கி வந்த மதுக் கடைகளை மூட உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன்படி,
ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகளில் 153 கடைகளை டாஸ்மாக் நிர்வாகம் மூட உத்தரவிட்டது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் கடைகளைத் திறக்க நீதிமன்றம உத்தரவிட்டுள்ள நிலையில் மூடப்பட்ட கடைகளுக்குப் பதிலாக மாற்று இடத்தில் டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்கு வாடகை கட்டடம் தேடியும், புதிதாக தனியார் இடத்தில் டாஸ்மாக் கடை கட்டித்தரக் கோரியும், டாஸ்மாக் கடை ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் பொதுமக்கள், தங்கள் ஊருக்குள் டாஸ்மாக் கடைகளை அமைக்க கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மதுக்கடைகளை இடமாற்ற டாஸ்மாக் ஊழியர்களுக்கு 15 நாள்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு முடிவடைந்து 1 வாரமாகியும் இன்னும் மாற்று இடங்களில் டாஸ்மாக் கடைகளை அமைக்க முடியாமல் டாஸ்மாக் நிர்வாகம் திணறி வருகிறது.
இதன் காரணமாக, மாவட்டம் முழுவதும் 680 டாஸ்மாக் ஊழியர்கள் பணி இழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு மாற்றுப் பணி வழங்கக் கோரி தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்த போதிலும் அரசுத் தரப்பில் இருந்து எந்த உத்தரவும் வராததால் டாஸ்மாக் ஊழியர்கள் செய்வதறியாது உள்ளனர்.
இதனிடையே மூடப்பட்ட கடைகளுக்கு மாற்றாக இதுவரை 4 டாஸ்மாக் கடைகள் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி கோபி கூகலூர், பவானி அருகே சித்தார், மயிலம்பாடி, விஜயமங்கலம் ஆகிய 4 இடங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் இடமாற்றம் செய்ய தொடர்ந்து மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பூட்டிய கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மதுக்களை இட மாற்றம் செய்ய இதுவரை எந்த அறிவிப்பும் அரசுத் தரப்பில் இருந்து வரவில்லை என டாஸ்மாக் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகத்தினர் கூறியதாவது:
மூடிய கடைகளுக்கு மாற்றாக இதுவரை 4 கடைகள் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் இயங்கி வந்த 235 டாஸ்மாக் கடைகளில் 83 கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. மற்ற கடைகளை இடமாற்றம் செய்ய தீவிரமாக இடம் தேடி வருகிறோம். மக்கள் எதிர்ப்பு காரணமாக பல இடங்களில் கடைகளை இடமாற்றம் செய்வதில் சிரமம் உள்ளது. இதற்கு மாற்று என்ன என்பதையும், பணி இழந்துள்ள டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பணி மாற்றம் செய்வது தொடர்பாகவும் அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com