கிராம நிர்வாக அலுவலரை மிரட்டியவர் கைது

மொடக்குறிச்சி தாலுகாவில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலரை மிரட்டிய சந்தோஷ் பாபு என்பவரை கைது

மொடக்குறிச்சி தாலுகாவில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலரை மிரட்டிய சந்தோஷ் பாபு என்பவரை கைது செய்ததையடுத்து, கிராம நிர்வாக அலுவலர்களின் உள்ளிருப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.
மொடக்குறிச்சி தாலுகா, அட்டவணை அனுமன்பள்ளி பகுதியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருபவர் ஈஸ்வரி. இவர், அப்பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி சுப்பிரமணி என்பவரது தோட்டத்துக்கு தீ விபத்து குறித்த விசாரணைக்கு ஏப்ரல் 17-ஆம் தேதி சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சந்தோஷ் பாபு (எ) சந்தோஷ் ராஜா என்பவர் ஈஸ்வரியிடம் தகராறு செய்ததுடன், அலுவலகத்துக்குச் சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக அறச்சலூர் போலீஸாரிடம் ஈஸ்வரி புகாரளித்தார்.
மேலும், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கத் தலைவர் அழகர்சாமி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத் தலைவர் சதீஷ் ஆகியோர் தலைமையில், ஈரோடு மண்டல கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் கொலை மிரட்டல் விடுத்த சந்தோஷ் பாபுவை கைது செய்யக் கோரி, மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் ஈடுபட்டனர்.
மொடக்குறிச்சி வட்டாட்சியர் மாசிலாமணி, அறச்சலூர் காவல் ஆய்வாளர் ஞானப்பிரகாசம் ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சு நடத்தினர். கைது செய்யும் வரை போராட்டத்தைக் கைவிடமாட்டோம் எனக் கூறியதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில், அறச்சலூர் போலீஸார் சந்தோஷ் பாபுவை சனிக்கிழமை கைது செய்தனர். இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com