மஞ்சள் கொள்முதலை மாநில அரசு மேற்கொள்ளக் கோரிக்கை

ஆந்திராவைப் போல் தமிழகத்திலும் மஞ்சள் கொள்முதலை அரசே மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆந்திராவைப் போல் தமிழகத்திலும் மஞ்சள் கொள்முதலை அரசே மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் செ.நல்லசாமி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவில், மஞ்சள் விளைச்சலில் ஆந்திரம் (45 சதவீதம்) முதலிடத்திலும், தமிழ்நாடு (25 சதவீதம்) இரண்டாம் இடத்திலும், மகாராஷ்டிரம் (15 சதவீதம்) 3-ஆவது இடத்திலும், கேரளம் (5 சதவீதம்) 4-ஆவது இடத்திலும் உள்ளன.
நடப்பு ஆண்டில் மஞ்சள் விலை சரிவை சந்தித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ. 15 ஆயிரத்துக்கும் மேலாக விற்றது. கடந்த ஆண்டு சராசரி விலை ரூ. 8 ஆயிரத்து 500 ஆக இருந்து வந்தது. தற்போது, ஈரோடு சந்தையில் ரூ. 7 ஆயிரமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடும் வறட்சியின் காரணமாக சாகுபடி பரப்பளவும், விளைச்சலும் நடப்பு ஆண்டில் வெகுவாக குறைந்துபோனது. விலைக்குத் தண்ணீரை வாங்கி மஞ்சள் பயிரைக் காப்பாற்றி அறுவடை செய்த விவசாயிகளும் உண்டு. இதனால், சாகுபடி செலவு நடப்பு ஆண்டில் அதிகரித்த நிலையில், விலையோ குறைந்துவிட்டது.
ஆந்திரத்தில் விளையும் மஞ்சளின் தரம் குறைவு. அதனால், அங்கு குவிண்டால் சராசரியாக ரூ. 5 ஆயிரத்துக்கு விற்கப்படுவதால், விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர். விலை சரிவை மேலும் குறைக்கவும், விலையை அதிகரிக்கச் செய்யவும் ஆந்திர அரசு 10 லட்சம் மூட்டைகளை குவிண்டால் ரூ. 6 ஆயிரம் என்ற விலையில் கொள்முதல் செய்து இருப்வு வைக்க முடிவு செய்துள்ளது.
இதற்காக ரூ. 200 கோடியை ஆந்திர அரசு ஒதுக்கியுள்ளது. தமிழக அரசு, தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் விலை சரிவை கண்டுகொள்ளவில்லை. இதனால், கடும் நஷ்டத்தை எதிர்நோக்கி இருக்கும் மஞ்சள் விவசாயிகளைக் காக்கும் விதமாக ஆந்திரத்தைப் பின்பற்றி தமிழ்நாட்டிலும் மஞ்சளைக் கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும்.
அப்படி செய்தால் மஞ்சள் விலை ரூ. 9 ஆயிரம் வரை உயர வாய்ப்புண்டு. மஞ்சளை 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பு வைத்துப் பாதுகாக்க முடியும். கொள்முதல் செய்யும் மஞ்சளை விலை உயரும்போது, அரசு நல்ல விலைக்கு விற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com