உலகத் தமிழ் படைப்பாளிகளை ஒருங்கிணைக்க வேண்டும்: ஸ்டாலின்  குணசேகரன்

உலகத் தமிழ் படைப்பாளிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசினார்.

உலகத் தமிழ் படைப்பாளிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசினார்.
ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் முதல்வர் இரா.வெங்கடாசலம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்க நிறைவு விழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
புலம்பெயர் வாழ்வு என தமிழர்கள் வாழ்வு குறித்துப் பேசும்போதெல்லாம் அதை இலக்கியத்தோடு இணைத்துப் பேசும் வழக்கம் இருந்து வருகிறது. ஊடகங்களிலும் அவ்வாறே பெரும்பாலும் சித்திரிக்கப்படுகிறது. உண்மையில் புலம்பெயர் நிலை என்பது இலக்கியத்தை மட்டுமல்லாது பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.
யாதும் ஊரே யாவரும் கேளிர், திரைகடல் ஓடியும் திரவியம் தேடு போன்ற அமர வாக்கியங்கள் தமிழர் பண்பாட்டையும், நாகரிகத்தையும் பறைசாற்றினாலும் அவை சொந்த மண்ணை விட்டுவிட்டு புலம்பெயர்ந்து வேற்று நாடுகளுக்குச் செல்வதை வரவேற்றுச் சொல்லப்பட்டதல்ல.  ஆனால், கல்விக்காகவும், வேலைக்காகவும் வெளிநாடு செல்வது ஏற்கத்தக்கதாகியது. அதன் அடிப்படையில்தான் இலங்கையில் 1956-ஆம் ஆண்டு புலம்பெயர்வு தொடங்கியது.  
அதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களை 1983-இல்  சிங்கள ராணுவம் தாக்கிய பின்னரே புலம்பெயர்வு நிலை அதிகரித்தது. உயிரைப் பாதுகாத்துக் கொள்ள புலம்பெயர்ந்தவர்கள் மொழி தெரியாத நாடுகளில் சொல்லொன்னா கொடுமைகளை அனுபவித்தனர். அத்தகைய கொடுமைகளுக்கு ஆட்பட்ட தமிழர்கள்  தங்கள் வலியைத் தங்களது படைப்புகள் மூலம் வெளிப்படுத்தினர்.
இன்று உலகின் பல நாடுகளிலும் வாழும் தமிழர்கள் ரத்தமும், சதையுமாக இலக்கியங்களைப் படைத்து வருகின்றனர். அவ்வாறான படைப்பாளிகளை ஒருங்கிணைப்பதும், அவர்களது தலை சிறந்த படைப்பு இலக்கியங்களைப் பாராட்டிப் பாதுகாப்பதும் இன்றைய வரலாற்றுத் தேவையாகும் என்றார்.
அதைத் தொடர்ந்து, இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த டென்மார்க் எழுத்தாளர் வீ. ஜீவகுமாரன் பேசியதாவது:
உள்நாட்டுப் போரினால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது, இனம், மொழி, ஜாதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் தஞ்சமடைந்த நாடுகளில் அகதி  என்ற அந்தஸ்தைக் கோரும்போது அதை ஏற்றுக் கொள்வதும், நிராகரிப்பதும், திருப்பி அனுப்புவதும் அரசுகளின் கைகளில்தான் உள்ளது.
ஏற்றுக்கொள்ளும்போது வசிப்பிடம், வேலை, உணவு தேடுவது, குடியுரிமை பெறுவது போன்ற நிகழ்வுகளுக்கு குறைந்தது 7 ஆண்டுகள் பிடிக்கும். அதற்கு இடைப்பட்ட காலத்தில் சந்திக்கும்  வேதனைகள் அதிகம். அங்கு, தனித்தன்மையுடன் இருப்பது, அந்த இனத்துடன் கலந்து வாழ்வது, சுயத்தைக் காப்பாற்றிக் கொண்டு அந்த இனத்துடன் கைகுலுக்கி வாழ்வது என்ற  மூன்று நிலைப் படிமங்களில் ஒரு புதிய சமுதாயத்துடன் இணைந்து வாழ்கிறோம்.
இந்நிலையில், புலம்பெயர் வாழ்வியல் இலக்கியத்தின் மூலம் நமது கலாசாரத்தைப் பிற மொழிகளிலும் கொண்டு செல்ல வேண்டும். அடுத்த தலைமுறையை வழிநடத்த நாம் மாற வேண்டும் என்றார்.
முன்னதாக தமிழ்த் துறைத் தலைவர் க.பன்னீர் செல்வம் வரவேற்றார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் அ.ராமலிங்கம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com