ஆழ்துளைக் கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

சென்னிமலை அருகே ஆழ்துளைக் கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை  இரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னிமலை அருகே ஆழ்துளைக் கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை  இரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னிமலை ஒன்றியம்,  பசுவபட்டி ஊராட்சிக்குள்பட்ட கணபதிபாளையம்,  தட்டாங்காடு,  கே.சி.நகர்,  கருங்கவுண்டன்வலசு காலனி ஆகிய இடங்களில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக  குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டு,  மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன.   இந்தப் பணிகள் நிறைவு பெற்று ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும்,  மின் இணைப்பு கொடுக்காததால் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி,  கே.சி.நகர்,  தட்டாங்காடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சென்னிமலை-காங்கயம் சாலையில் பசுவபட்டி பிரிவு  அருகே திடீர் சாலை மறியலில் புதன்கிழமை  இரவு ஈடுபட்டனர்.  தகவலறிந்து அங்கு வந்த சென்னிமலை காவல் ஆய்வாளர் வெங்கடாசலம்,  பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பொதுமக்கள் கூறியதாவது: பசுவபட்டி ஊராட்சி பகுதியில் 3 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து மின் மோட்டார் பொருத்தி ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. இதற்கான மின் இணைப்புக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் மின் வாரிய அலுவலகத்தில் பணமும் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் மின் இணைப்பு வழங்காமலேயே உள்ளனர். இதனால் நாங்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகிறோம் என்றனர்.
இதைத் தொடர்ந்து,  ஈரோட்டில் உள்ள மின் வாரிய உயர் அதிகாரிகள், செல்லிடப்பேசியில் பொதுமக்களிடம் தொடர்பு கொண்டு பேசினர்.
இதில்,  பசுவபட்டி ஊராட்சிக்கு வியாழக்கிழமை (ஜூலை27) நேரில் வந்து இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.  அதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்தப் போராட்டத்தால் சென்னிமலை-காங்கயம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com