வாகீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலம் இந்து அறநிலையத் துறையிடம் ஒப்படைப்பு

பவானியை அடுத்த பட்லூர் கிராமத்தில் வாகீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 10.52 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைதாரர்கள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.

பவானியை அடுத்த பட்லூர் கிராமத்தில் வாகீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 10.52 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைதாரர்கள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.
 பட்லூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த வாகீஸ்வரர், சென்றாயப் பெருமாள், கரிய காளியம்மன் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களை 2008-ஆம் ஆண்டு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த இந்து அறநிலையத் துறை, அதிகாரிகளை நியமித்து நிர்வகித்து வந்தது. இக்கோயிலுக்குச் சொந்தமாக சுமார் 65 ஏக்கர் நிலங்கள் உள்ளன.
 இக்கோயில்களை நிர்வகித்து வந்த நிர்வாகிகள் பொறுப்புகளை ஒப்படைக்க மறுத்த நிலையில், இந்து அறநிலையத் துறை பொறுப்பேற்று கோயிலை நிர்வகித்து வந்தது. இந்நிலையில், 2013-ஆம் ஆண்டு கோயில் நிலங்கள் அனைத்தும் அளவீடு செய்யப்பட்டது. இந்நிலங்களில் விவசாயப் பணிகள் மேற்கொண்டு வந்த விவசாயிகள் கோயில் நிர்வாகத்துக்கு குத்தகை செலுத்துவதில்லை எனக் கூறப்படுகிறது.
 இதனால், கோயில் நிலங்களுக்கு குத்தகை செலுத்தாமல் விவசாயம் செய்து வந்த விவசாயிகள் 32 பேர் மீது கோவை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, கோயில் நிலங்களை வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் திரும்ப ஒப்படைக்குமாறு குத்தகைதாரர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
 இந்நிலையில், நீதிமன்ற நகல்கள் கிடைக்கப் பெற்ற குத்தகைதாரர்கள் நஞ்சப்பன், நல்லசாமி, மணிகண்டன், நல்லான் ஆகியோர் தாங்கள் சாகுபடி செய்துவந்த 10.52 ஏக்கர் நிலங்களை கோயில் நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைப்பதாக பட்லூர் வாகீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முருகையாவிடம் கடிதம் வழங்கினர்.
 அப்போது, கோயில் தக்கார் வி.கங்காதரன், அறநிலையத் துறை ஆய்வாளர் ஆர்.ரவிகுமார், நில வருவாய் அலுவலர் திருமூர்த்தி, கிராம நிர்வாக அதிகாரி விஜயகுமார், பொதுமக்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com