போலி உறுப்பினர்கள் மூலமாக நூல் மானியத்தில் மோசடி: காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

போலி உறுப்பினர்கள் மூலமாகநூல் மானியத்தில் மோசடி: காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

போலி உறுப்பினர்களைச் சேர்த்து நூல் மானியத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 இதுகுறித்து, பவானி தாலுகா, பச்சம்பாளையம், அண்ணாமடுவு, சித்திரெட்டிபாளையத்தைச் சேர்ந்த மக்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு:
 எங்கள் ஊரில் வசித்து வரும் அனைத்துக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் குடும்ப அட்டைகள் மற்றும் ஆதார் அட்டைகளின் நகல்களை எங்களுக்கே தெரியாமல் தவறான முறையில் கைப்பற்றி அதன்மூலமாக முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக அறிந்தோம்.
 அதுகுறித்து நாங்கள் விசாரித்தபோது எங்கள் ஊரில் வசித்து வரும் அனைத்து நபர்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படங்களை எங்களுக்கே தெரியாமல் ஏதோ ஒரு அரசு அலுவலகத்தின் மூலமாகப் பெற்று அதன் மூலம் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.
 முறைகேடாக பெற்ற ஆவணங்கள் மூலமாக எங்களைக் கைத்தறி நெசவாளர் உறுப்பினர்களாக போலியாகக் கணக்குக்காட்டி எங்களது கையெழுத்தை சிலர் போட்டு, முறைகேடாக நூல் மானியம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
 எங்கள் ஊரில் முறைகேடாக குடும்ப அட்டைகள் மற்றும் இதர ஆவணங்களைப் பெற்றது போலவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு, பவானி, ஆப்பக்கூடல், ஜம்பை, அந்தியூர், கவுந்தப்பாடி, கோபி, சத்தி, சென்னிமலை, மொடக்குறிச்சி, கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் இதேபோல சிலர் முறைகேடு செய்து வருகின்றனர்.
 எங்கள் ஊரில் உள்ள பெரும்பாலான மக்களுக்கும் கைத்தறி நெசவுத் தொழிலுக்கும் சம்பந்தமே இல்லை. இந்நிலையில், எங்கள் ஆவணங்களைப் பயன்படுத்தி ஏதோ ஒரு ஆதாயத்தைப் பெற்று வருவது தெரியவந்தது.
 இதையடுத்து, கைத்தறி நெசவாளர்களுக்கு மானியம் கிடைக்கும் வழிமுறைகளை ஆராய்ந்தபோது எங்களது பெயர்களைப் பயன்படுத்தி போலியாக உறுப்பினர்களாகச் சேர்த்து, திண்டல் முருகன் டெக்ஸ் மற்றும் ஸ்ரீ ஆனூர் டெக்ஸ் என்ற நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
 மேலும், அந்த நிறுவனம் ஒவ்வொரு ஊரிலும் இதேபோல மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் திருப்பூர் மாவட்டம், முத்தூர், மேட்டுக்கடையைச் சேர்ந்த கரிச்சிகுமார் என்பது உறுப்பினர் படிவத்தின் மூலமாகத் தெரியவந்துள்ளது.
 இதேபோல, அவரை சார்ந்த வேறு சில நபர்களும் வெவ்வேறு பெயரில் போலியான நிறுவனத்தைத் தொடங்கி, தேசியக் கைத்தறி வளர்ச்சிக் கழகம் வழங்கி வரும் ஆதாயங்களை முறைகேடாகப் பெறுவது மட்டுமின்றி எங்கள் உரிமை சம்பந்தப்பட்ட ஆவணங்களை எங்களுக்குத் தெரியாமல் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து, பொதுமக்களாகிய எங்களது ஆவணங்களை அவர்களிடம் இருந்து மீட்டுத் தரவேண்டும். மேலும், எங்களது அனுமதியின்றி எங்களது ஆவணங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கவேண்டும்.
 இதுபோன்று முறைகேடாக பொதுமக்களின் ஆவணங்களை அனுமதியில்லாமல் அவர்களின் சுயலாபத்துக்கு பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com