ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு: பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்

ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
ஈரோட்டில் பெரும்பள்ளம் ஓடை,  பிச்சைக்காரன் ஓடை, சுண்ணாம்பு ஓடை ஆகிய ஓடைகளின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஓடை பகுதிகளில் இரு கரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புக் குடியிருப்புகளை அகற்றுவதற்காக வருவாய்த் துறை, மாநகராட்சி சார்பில் குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.
வருவாய்த் துறையினரின் கணக்கெடுப்புப்படி 3 ஓடைகளிலும் மொத்தம் 2,043 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதற்கான நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றவும்,  மாற்று இடம் வழங்கக் கோரியும் ஆக்கிரமிப்பாளர்கள் சார்பில், ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஈரோடு வட்டாட்சியர் ஜெயகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது வட்டாட்சியர் ஜெயகுமார் பேசியதாவது:
ஈரோட்டில் உள்ள பெரும்பள்ளம் ஓடை,  பிச்சைக்காரன் ஓடை, சுண்ணாம்பு ஓடை பகுதிகளில் நீர் நிலை புறம்போக்கு என்று கண்டறியப்பட்ட மொத்தம் 2,043 குடியிருப்புகளை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மாவட்ட நிர்வாகத்துக்கு எவ்வித தொடர்பும் கிடையாது.
முற்றிலும் நீதிமன்ற உத்தரவுப்படி மட்டுமே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ஏற்கெனவே 685 வீடுகள், 42 கோயில்கள் ஆக்கிரமிப்பில் இருந்ததையடுத்து இடிக்கப்பட்டுவிட்டன. ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சித்தோட்டை அடுத்துள்ள நல்லகவுண்டன்பாளையம் கிராமத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்படும் என்றார்.
இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com