சத்தியமங்கலம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய சிறுமி, மூதாட்டி மீட்பு

சத்தியமங்கலம், புதுப்பீர்கடவு வனத்தில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய சிறுமி, மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

சத்தியமங்கலம், புதுப்பீர்கடவு வனத்தில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய சிறுமி, மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
சத்தியமங்கலத்தை அடுத்த புதுப்பீர்கடவு வனப் பகுதி, அதையொட்டி உள்ள ராமபயலூர் வட்டாரத்தில் சனிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. மலைப் பகுதியில் பெய்த மழையால் பள்ளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு ஓடைகளில் பெருக்கெடுத்தோடிய வெள்ளநீர், ராமபயலூர் குளத்தை வந்தடைந்தது.
குளத்துக்கு வேகமாக வந்த வெள்ளத்தைப் பார்த்த கிராம மக்கள் அங்கு மேய்ந்து கொண்டிருந்த கால்நடைகளை அப்புறப்படுத்தினர். ஆயினும், 2 எருமைகள், 3 ஆடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதையறிந்த அதே ஊரைச் சேர்ந்த ராசாயம்மாள், அவரது பேத்தி பூவிழி ஆகியோர் பள்ளத்தில் மேய்ந்து கொண்டிருந்த தங்களது மாட்டைப் பிடிக்கச் சென்றபோது அவர்களும் வெள்ளத்தில் சிக்கினர். மாடும் வெள்ளத்தில் சிக்கியது.
இதுகுறித்து கிராம மக்கள் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி ராசாயம்மாள், பூவிழி மற்றும் மாட்டை கயிறு கட்டி மீட்டு கரைப் பகுதிக்கு கொண்டு வந்தனர். அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட சிறுமி பூவிழி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மலைப் பகுதியில் இருந்து பெருக்கெடுத்து வரும் வெள்ளம் ராமபயலூர் குளத்தில் கலப்பதால் குளம் நிரம்பும் நிலையில் உள்ளது. குளத்துக்கு தொடர்ந்து தண்ணீர் வருவதால் குளம் நிரம்பி, உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், குளத்தையொட்டிய பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு வட்டாட்சியர் புகழேந்தி அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com