அனுமதியற்ற கட்டடங்களை டிசம்பர் 21-க்குள் வரன்முறைப்படுத்த வாய்ப்பு: ஆட்சியர் தகவல்

அனுமதியற்ற கட்டடங்களை வரன்முறைப்படுத்த டிசம்பர் 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

அனுமதியற்ற கட்டடங்களை வரன்முறைப்படுத்த டிசம்பர் 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிப் பகுதியில் அமைந்துள்ள 1.7.2007 அல்லது அதற்கு முன்னர் கட்டப்பட்ட அனுமதியற்ற, அனுமதிக்கு மாற்றமான அனைத்து வகையான கட்டடங்களையும் முறைப்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள அனுமதியற்ற, அனுமதிக்கு மாற்றமான கட்டடங்களை வரன்முறைப்படுத்த இணையதள முகவரியில் டிசம்பர் 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து தங்கள் அனுமதியற்ற கட்டடங்களை முறைப்படுத்திக் கொள்ளலாம். இணையதள விண்ணப்பங்களைப் பதிவு பெற்ற கட்டடக் கலை வல்லுநர், உரிமம் பெற்ற அளவையாளர், கட்டடப் பொறியாளரால் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இதற்கான வரன்முறைக் கட்டணம், கூராய்வுக் கட்டணங்களை ஒரே தவணையில் இணையதளம் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்துடன் பத்திர நகல், ஆவணங்களின் நகல்களைப் பதிவு செய்து இணையதளம் மூலம் உரிய அலுவலர்களுக்கு சமர்ப்பித்து, விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதற்கான ரசீதை இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
இவற்றில், 4,000 சதுர அடி கட்டுமானப் பரப்புக்கு உள்பட்ட குடியிருப்புகள், 2,000 சதுர அடிக்கு உள்பட்ட வணிகக் கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி ஆணையர், பேரூராட்சிகளின் செயல் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறப்புக் கட்டடம், தொகுப்புக் கட்டடம், பொது உபயோகக் கட்டடம், தொழிற்சாலைக் கட்டடங்களுக்கு ஈரோடு உள்ளுர் திட்டக் குழும உறுப்பினர் செயலருக்கும், சித்தோடு புதுநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலருக்கும், சேலம் மண்டல நகர் ஊரமைப்புத் துணை இயக்குநருக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டடத்தின் உயரம் 17.25 மீட்டருக்கும் அதிகமாக உள்ள பலமாடிக் கட்டடங்களுக்கு நகர் ஊரமைப்பு ஆணையருக்கும், கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com