பவானி - காவிரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த 578 குடும்பத்தினர் மேடான பகுதிகளில் தஞ்சம்

பவானி, காவிரி ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த 578 குடும்பத்தினர் மேடான பகுதிகளிலும், நிவாரண முகாம்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். 

பவானி, காவிரி ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த 578 குடும்பத்தினர் மேடான பகுதிகளிலும், நிவாரண முகாம்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். 
 கர்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் காவிரி ஆற்றில் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி விநாடிக்கு 60 ஆயிரமாக இருந்த நீர்த் திறப்பின் அளவு படிப்படியாக காவிரி ஆற்றில் அதிகரித்து தற்போது விநாடிக்கு 2 லட்சம் கன அடி பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளம் குறைவாகச் சென்றபோது காவிரிக் கரையோரத்தில் ஒரு சில பகுதிகள் மட்டுமே வெள்ளத்தால் சூழப்பட்டிருந்தன. 
 தற்போது வெள்ளத்தின் அளவு அதிகரித்துள்ளதால் பவானி புதிய பேருந்து நிலையம் கந்தன் நகர், பசவேஸ்வரர் தெரு, மீனவர் தெரு, கீரைக்காரத் தெரு, பாலக்கரை வீதி,  காவேரி வீதி உள்ளிட்ட பகுதிகளில் 141 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு மேடான பகுதிகளிலும், நிவாரண முகாம்களிலும் வைக்கப்பட்டுள்ளனர். 
 பவானிசாகர் அணை ஆகஸ்ட் 14 ஆம் தேதி நள்ளிரவில் நிரம்பியதைத் தொடர்ந்து உபரி நீர் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி என திறக்கப்பட்டது. பின்னர், படிப்படியாக நீர்வரத்தின் அளவைப் பொருத்து விநாடிக்கு 75 ஆயிரம் கன அடி வரையில் தண்ணீர்  திறக்கப்பட்டது. இதனால், பவானி ஆற்றங்கரையோரப் பகுதியில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பவானி நகராட்சிப் பகுதியில் பழைய பேருந்து நிலையம், சீனிவாசபுரம், சோமசுந்தரபுரம்,  திருவள்ளுவர் நகர் பகுதிகளைச் சேர்ந்த 313 குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டனர். 
 இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் காவிரி, பவானி ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்ததால் இரு கரைகளிலும் மேலும் பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பவானி ஆற்றின் கரையோரத்தில் பெருக்கெடுத்த வெள்ளம் காடையம்பட்டி ஏரியின் உபரி நீர் வெளியேறும் கால்வாய் வழியாக உள்புகுந்தது. இதனால், தாழ்வான பகுதியான தாமரைக்குளம் பகுதி வெள்ளத்தால் சூழும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உடைமைகளை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு மேடான பகுதிக்கு வெளியேறினர். 
 பவானி பழைய பேருந்து நிலையத்தை சூழ்ந்த வெள்ளம், நகராட்சி வணிக வளாகத்தில் உள்ள சுமார் 25 க்கும் மேற்பட்ட கடைகளுக்குள் புகுந்தது. இதனால், இவ்வழியே செல்லும் கன ரக, இலகு ரக, இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் நீந்தியபடி சென்றன. இதனை வேடிக்கைப் பார்க்க ஏராளமானோர் திரண்டு வந்ததால் பவானி பழையபாலம் கரையோரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கால் பவானி கூடுதுறை பகுதிக்கு மூன்றாவது நாளாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 
 இதேபோல, ஜம்பை பேரூராட்சி, ஜே.ஜே. நகரில் கரையோரத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும், ஆப்பக்கூடல், ஒரிச்சேரிப்புதூர், பெருந்தலையூர், சொரையாம்பாளையம், சிறைமீட்டான்பாளையம் உள்ளிட்ட பகுதிகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 
 கரையோரத்தில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பவானி வட்டாரத்தில் 578 குடும்பங்களைச் சேர்ந்த 2,027 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 
 முதியவர் சாவு:
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை காவிரி ஆற்றில் எச்சரிக்கையை மீறி காவேரி வீதி, காசி விஸ்வநாதர் கோயில் எதிரில் உள்ள படித்துறையில் குளிக்கச் சென்ற முதியவர் வெள்ளத்தில் மூழ்கியதில் உயிரிழந்தார். இவரது உடல் மீனவர்களின் உதவியால் உடனடியாக மீட்கப்பட்டது.    பவானி, காவிரி ஆறுகளில் தொடர் வெள்ளப் பெருக்கால் கரையோரப் பகுதிகளில் பதற்றம் அச்சம் வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com