வெள்ளப்பெருக்கு: பாதுகாப்பு முகாம்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளையும், அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள

ஈரோடு மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளையும், அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்களையும் பள்ளிக் கல்வித் துறைச் செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டி.உதயசந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
 ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளம் பாதித்த இடங்களை மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் முன்னிலையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
 தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்துக்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டி. உதயசந்திரன் தலைமை வகித்துப் பேசியதாவது:
 தென்மேற்குப் பருவமழை காரணமாக பவானிசாகர், மேட்டூர் அணையில் நீர் வரத்து அதிகமாக வருவதால் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது.
 அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 34 முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 605 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2,003 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, கழிப்பிடம், மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் போர்க்கால அடிப்படையில் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. 
 பவானி நகராட்சியில் மட்டும் 8 முகாம்கள் அமைக்கப்பட்டு 323 குடும்பங்களைச் சார்ந்த 742 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கின் காரணமாக 300 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு, வெள்ள பாதிப்பு பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 
 ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், பவானி நகராட்சி, கொடுமுடி, பவானிசாகர் மொடக்குறிச்சி, கோபிசெட்டிபாளையம் ஆகிய வெள்ளம்  பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதிகள், கழிப்பிடம் ஆகிய அத்தியாவசிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நோய்த் தொற்று ஏற்படாதவாறு பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 ஈரோடு மாவட்டத்தில் 42 பேரூராட்சிகள் உள்ளன. அவற்றில் கொடுமுடி, கிளாம்பாடி  உள்ளிட்ட 3 பேரூராட்சிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர் தங்குதடையின்றி கிடைக்கும் வகையில்  குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் விரைந்து செயல்பட வேண்டும். மின்பழுது ஏற்படும்போது ஜெனரேட்டர் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள் மட்டுமல்லாது மற்ற பகுதிகளிலும் மருத்துவ முகாம்களை நடத்தவும், 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்குமாறும் சுகாதாரத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 108 அவசர ஊர்திகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். காவல் துறை, தீயணைப்புத் துறை அலுவலர்கள் முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் தங்கள் வீடுகளுக்குச் செல்வதைத்ம தடுக்கும் வகையில்  தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 
 பொதுப் பணித் துறையினர் ஆறுகள், குளங்களின் கரைகள் நல்ல நிலையில் உள்ளதா என்று சோதனை செய்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கரைகள் பாதிக்கப்பட்டால் அதைத் தடுக்க தேவையான மணல் மூட்டைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையினர் சாலைகளில்  மரங்கள், மின்கம்பங்கள் விழுந்தால் அவற்றை அகற்றுவதற்குத் தேவையான கன ரக வாகனங்கள், பொக்லைன் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 
 வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கள் பகுதியில் மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகள், தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களை திருமண மண்டபங்கள், பள்ளிகள் ஆகியவற்றில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அலுவலர்களும் தங்கள் பகுதிகளுக்கு உள்பட்ட பல்வேறு தன்னார்வலர்களை தொடர்பு கொண்டு அப்பகுதிகளில் ஏற்படும் வெள்ள பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். 
மேலும், கிராமத்தில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறையின் மூலம் பயிர் சேதம் குறித்து கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. 
எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி ஈரோடு மாவட்ட மக்களை வெள்ள பாதிப்பில் இருந்து முழுமையாகப் பாதுகாக்க வேண்டும் என்றார்.
 முன்னதாக, பவானி ஆற்றில் ஆகாயத் தாமரை அகற்றும் பணியையும், பவானி வட்டத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பாக தங்க வைக்கப்படிருந்த முகாமையும், காவிரி ஆறு, காலிங்கராயன் அணைக்கட்டுப் பகுதிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டி.உதயச்சந்திரன் நேரில் பார்வையிட்டார். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஜெ.ஏ.பத்மஜா, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மு.பாலகணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com