வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடம்: அரசு பரிசீலனை.

வாடகை, இட நெருக்கடியில் இயங்கி வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடம் அமைப்பதற்காக

வாடகை, இட நெருக்கடியில் இயங்கி வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடம் அமைப்பதற்காக அனுப்பியுள்ள பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோடு துணைப் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தின்கீழ், ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், நாமக்கல் வடக்கு, தெற்கு, திருச்செங்கோடு ஆகிய 6 இடங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகமும், பவானி, சத்தியமங்கலம், ராசிபுரம், பரமத்திவேலூர், குமாரபாளையம்  ஆகிய 5 இடங்களில்  வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களும்  இயங்கி வருகின்றன.
 இந்நிலையில், ஈரோட்டில்  புதிதாக உருவாக்கப்பட்ட  ஈரோடு மேற்கு வட்டாரப் போக்குவரத்து    அலுவலகத்துக்குத் தண்ணீர்பந்தல்பாளையத்தில் ரூ. 1.75 கோடியில் அமைக்கப்படவுள்ள  அலுவலகத்தில் ஆய்வாளர்கள், நிர்வாக அலுவலகம், புகைப்படம் எடுத்தல் பயிற்சிக்கூடம் ஆகிய பிரிவுகள் அமையவுள்ளன. 
  மேலும், இந்த வளாகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவோருக்கான  சோதனை ஓட்டப் பாதை வசதி அமைக்கும் வகையில் போதிய நிதி ஒதுக்கீடு, நிர்வாக அனுமதியும்  கிடைத்துள்ளதால் அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.
 இதுகுறித்து, ஈரோடு துணைப் போக்குவரத்து ஆணையர் முத்து கூறியதாவது:
 பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சுமார் 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்து திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பியுள்ள பரிந்துரை பரிசீலனையில் உள்ளது.
 இதேபோல, நாமக்கல் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு நாமக்கல் ஆட்சியர்  அலுவலக வளாகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை எங்களிடம் ஒப்படைக்கக் கோரி வட்டாட்சியர் வாயிலாக மாவட்ட ஆட்சியரிடம் கோரியுள்ளோம். அங்கு அலுவலகம் அமைக்க திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும் விரைவில் அந்த அலுவலகங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com